சேலத்தில் வருகிற 21–ஆம் தேதி, ‘மாநில உரிமை மீட்பு’ முழக்கத்தோடு நடைபெற உள்ள திமுக இளைஞர் அணியின் மாநில மாநாட்டையொட்டி சென்னை, சிம்சன் பெரியார் சிலை அருகில், மாநாட்டுச் சுடர் ஓட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
சேலம் மாவட்டம், பெத்த நாயக்கன் பாளையத்தில், திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு கடந்த மாதமே நடைபெறவிருந்தது. மாநாட்டுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்றன. மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து, இளைஞர் அணிச் செயலாளரும் தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சென்று, மாநில இளைஞர் அணி செயலாளர்களைச் சந்தித்து உரையாற்றினார். ஆனால், தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ளம் காரணமாக மாநாடு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜனவரி 21 ஆம் தேதியன்று மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அதற்கேற்ப மாநாட்டுக்கான ஏற்பாடுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முடுக்கிவிட்டார். ‘மாநில உரிமை மீட்பு’ முழக்கத்தோடு நடைபெறும் திமுக இளைஞர் அணி மாநாட்டின் நோக்கங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், இருசக்கர வாகன பேரணி, மாநாட்டுப் பாடல் வெளியீடு எனப் பல்வேறு நிகழ்ச்சிகளை இளைஞர் அணி மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், மாநாட்டுச் சுடர் ஓட்டத்தை இளைஞர் அணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சென்னை, அண்ணா சாலை சிம்சன் சந்திப்பில் உள்ள பெரியார் சிலையில் இருந்து இன்று காலை தொடங்கி வைத்தார். அதற்கு முன்னதாக அவர் பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில் மாநாட்டுச் சுடர் தொடர் ஓட்டம் எல்.ஐ.சி.சந்திப்பு, ஸ்பென்சர் சந்திப்பு, அண்ணா மேம்பாலம், அறிவாலயம், அன்பகம், சைதாப்பேட்டை, கிண்டி கத்திபாரா, ஆலந்தூர், மீனம்பாக்கம், தாம்பரம் வழியாகச் சென்ற நிலையில், மாநாட்டுச் சுடர் செல்லும் இடங்களில் எல்லாம் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாநாட்டுச் சுடர் தொடர் ஓட்டம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் வழியாக 316 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து, மாநாடு நடைபெறும் சேலம் மாவட்டத்தை வருகிற 20 ஆம் தேதி மதியம் 1.30 மணி அளவில் சென்றடைகின்றது. மாநாட்டுச் சுடரை, அன்று மாலையில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினிடம் உதயநிதி ஸ்டாலின் ஒப்படைக்கிறார்.
இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது X சமூக வலைதள பக்கத்தில், “பாசிச இருளகற்றி ஒட்டு மொத்த இந்தியாவுக்கே வெளிச்சத்தை தரவுள்ள நம் திமுக இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாட்டை முன்னிட்டு, சேலம் மாநாட்டுத் திடல் நோக்கிய சுடர் தொடர் ஓட்டத்தை சென்னை அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலைகளுக்கு அருகே இன்று தொடங்கி வைத்தோம்.
இந்த சுடர், சென்னை – காஞ்சிபுரம் – விழுப்புரம் – கள்ளக்குறிச்சி – சேலம் மாவட்ட இளைஞர் அணி தோழர்களால் மாநாடு நடைபெற இருக்கிற சேலம் பெத்தநாயக்கன்பாளையத்திற்கு கொண்டு சேர்க்கப்படவுள்ளது. சேலம் மாநாட்டுத்திடலில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி மாலை இளைஞரணியின் மாநில துணைச் செயலாளர்களால் என்னிடம் வழங்கப்படவுள்ள மாநாட்டுச் சுடரை, கழகத் தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் ஒப்படைக்கவுள்ளேன்.
கடந்த 9 ஆண்டுகளாக பறிக்கப்பட்ட நம் மாநில உரிமைகள் அனைத்தையும் மீட்டெடுக்க உறுதியோடு உழைப்போம். இளைஞர் அணி மாநாட்டின் வெற்றிக்கு சேலத்தை நோக்கி அணிவகுப்போம் – பாசிஸ்ட்டுகளை வீழ்த்துவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், மாநாட்டுச் சுடர் ஓட்டத்தைத் தொடர்ந்து பைக் பேரணி, ட்ரோன் ஷோ, இந்தியாவிலேயே முதல்முறையாக மாநாட்டுப் பந்தலில் 2 லட்சம் இருக்கைகள், சைவம், அசைவம் என 3 லட்சம் பேருக்கு சாப்பாடு, 50,000 வாகனங்களை நிறுத்த வசதி, 5 லட்சம் பேருக்கு டி ஷர்ட், முதலமைச்சர் வருகைக்கான சிறப்பு ஏற்பாடுகள்… என இந்தியாவே திரும்பி பார்க்க வைக்கிற விதமாக மாநில உரிமை மீட்பு முழக்கத்திற்கு தயாராகி வருகிறது திமுக இளைஞர் அணி.