71% கூடுதலாக பொழிந்து தாராளம்… முடிவுக்கு வரும் தென்மேற்கு பருவமழை… உச்சம் தொட்ட சூரிய மின் உற்பத்தி!
கேரளாவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலும், வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும் பெய்யும். நாட்டின் ஆண்டு மழைப்பொழிவில் 70 சதவீதத்தை வழங்குவது தென்மேற்கு பருவமழைதான்.
இந்நிலையில், தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு சராசரியை விட அதிகமாக பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் முன் கூட்டியே தெரிவித்திருந்தது.
அதன்படியே இந்த ஆண்டு தமிழகம், புதுச்சேரியில் தென் மேற்கு பருவ மழை இயல்பான அளவை விட, 71 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. “கடந்த சில ஆண்டுகளாகவே, தென் மேற்கு பருவ காலத்தில், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களுக்கு பரவலாக மழை கிடைக்கிறது. குறிப்பாக, வளிமண்டல சுழற்சி அல்லது வெப்ப சலன மழை வாயிலாக, தமிழகம் பயன் பெறுகிறது.
தென் மேற்கு பருவ காலத்தில் ஓரளவுக்கு மழை கிடைப்பதால், சென்னை உள்ளிட்ட நகரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.இந்த வகையில், இந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழை வழக்கத்தை விட, ஒரு வாரம் முன்கூட்டியே துவங்கியது. கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரையிலான காலத்தில், தமிழகம், புதுச்சேரியில், 19 செ.மீ. மழை பெய்வது இயல்பான அளவு. ஆனால் நடப்பாண்டில், இந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில், 33 செ.மீ., மழை பெய்துள்ளது. இது இயல்பான அளவை விட, 71 சதவீதம் அதிகம்.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் தவிர்த்து, மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இயல்பை விட அதிக அளவு மழை பெய்துஉள்ளது.திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பான அளவாக, 5 செ.மீ., மழை பெய்ய வேண்டிய நிலையில், 28 செ.மீ., மழை பெய்துள்ளது. இது, 438 சதவீதம் அதிகம். சென்னையில் இயல்பான அளவான, 28 செ.மீ., மழையை விட, 44 செ.மீ., பெய்துள்ளது. இது, 56 சதவீதம் அதிகம். விருதுநகரில் 167; திருப்பூரில் 155; தேனியில் 151; கரூரில் 121, ராணிப்பேட்டையில் 103 சதவீதம் கூடுதலாக மழை பதிவாகி உள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
முடிவுக்கு வரும் தென்மேற்கு பருவமழை
இந்த நிலையில், “அடுத்த ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெரிய அளவில் மழை எதுவும் இருக்காது. அடுத்த 48 மணி நேரத்திற்கு, நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 சென்டி கிரேடு ஆக இருக்கலாம். மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 சென்டி கிரேடு வரை இருக்கலாம். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கலாம்” எனத் தெரிவிக்கிறார் சென்னை வானிலை மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன்.
உச்சம் தொட்ட சூரிய சக்தி மின் உற்பத்தி
கடந்த 10 ஆண்டுகளில் ஆறு ஆண்டுகள், ஆகஸ்டு மாதத்தின் இரண்டாம் பாதியில் தான் அதிகபட்சமாக 24 மணி நேர மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. 2014 ஆகஸ்டு 25 அன்று பதிவான 9 செ.மீ., 2011 ஆகஸ்ட் 25 அன்று பெய்த 16 செ.மீ மழையே இதுவரை இல்லாத அதிகபட்ச மழைப்பொழிவாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே கடந்த ஞாயிறன்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமான டாங்கெட்கோ ( Tangedco) வின் சூரிய சக்தி மின்சார உற்பத்தி புதிய உச்சத்தைத் தொட்ட நிலையில், அன்றைய தினம் டாங்கெட்கோ 43.2 மில்லியன் யூனிட் (Mu) சூரிய சக்தி மின்சாரத்தை உறிஞ்சியது இதுவரை இல்லாத உச்சமாக பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் 8,574 மெகாவாட் அளவுக்கு சூரிய சக்தியை உற்பத்தி செய்யும் அளவுக்கான சூரிய மின் தகடுகள் நிறுவப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும், grid ல் குறைந்தபட்சம் 100 மெகாவாட் மின்சாரம் இணைக்கப்படுகிறது. இதன் விளைவாக வானம் தெளிவாக இருக்கும்போது சூரிய மின் உற்பத்தி சிறப்பாக இருக்கும்” என்கிறார் டாங்கெட்கோவின் மூத்த அதிகாரி ஒருவர்.