திரைகடல் ஓடி முதலீடு செய்க!
சர்வதேச வர்த்தகங்கள் பெரும்பாலும் நீர்வழிப் போக்குவரத்தை நம்பியே இருக்கின்றன. நாடுகளுக்கு இடையே பயணப்படும் சரக்குகளில் சுமார் 80% சதவீதம், கப்பல் வழியாகத்தான் செல்கின்றன. சர்வதேச வர்த்தகத்தில் துறைமுகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இந்தியாவின் மொத்தக் கடற்கரை நீளம் ஏழாயிரத்து 517 கிலோ மீட்டர். இந்தியா முழுவதும் 12 பெரிய துறைமுகங்களும் 200 சிறிய துறைமுகங்களும் உள்ளன. இந்தியாவில் கடற்கரை மாநிலங்கள் என எட்டு மாநிலங்களும் இரண்டு யூனியன் பிரதேசங்களும் உள்ளன. எட்டு கடற்கரை மாநிலங்களில் அதிக நீளம் உள்ள கடற்கரையைக் கொண்ட மாநிலம் குஜராத். 1600 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த மாநிலத்தின் கடற்கரையில், ஒரு பெரிய துறைமுகமும் 40 சிறிய துறைமுகங்களும் உள்ளன. அடுத்த இடத்தில் இருப்பது தமிழ்நாடு. 1076 கிலோ மீட்டம் நீளம் கொண்ட தமிழ்நாட்டுக் கடற்கரையில் மூன்று பெரிய துறைமுகங்களும் 17 சிறிய துறைமுகங்களும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சிறிய துறைமுகங்கள் தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டிலும் பெரிய துறைமுகங்கள் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலும் உள்ளன.
இந்த நிலையில் துறைமுகங்கள் வளர்ச்சி, கடல்சார் வணிகம் தொடர்பாக உலகளாவிய கடல்சார் இந்திய உச்சி மாநாடு மும்பையில் நடக்கிறது. அக்டோபர் 17 முதல் 19 வரை நடக்கும் இந்த மூன்று நாள் மாநாட்டில், முதல் நாள் இந்தியாவில் உள்ள கடற்கரை மாநிலங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனி அமர்வுகள் நடந்தன. அந்த அமர்வுகளில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தமிழ்நாட்டு அமர்வில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டார். அவர் பேசும் போது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகங்களில் சிறு துறைமுகங்களின் பங்கைக் குறித்து எடுத்துரைத்தார். உதாரணமாக தமிழ்நாட்டில் உள்ள காட்டுப்பள்ளித் துறைமுகம் பெரிய துறைமுகங்களுக்கு இணையாக வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்டார். இந்திய கடல்சார் வளர்ச்சியில், தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. கடல்சார் வணிகம் என்பது வெறும் சரக்கு போக்குவரத்து மட்டுமல்ல. வேலைவாய்ப்பையும் தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் உருவாக்குகிறது என்று கூறினார். உலக முதலீட்டாளர்கள் அனைவரும் தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் திட்டங்களில், முதலீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
கடைசியாக ஔவையாரை மேற்கோள் காட்டி அமைச்சர் எ.வ.வேலு சொன்ன விஷயம்தான் ஹைலைட்.
“திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்ற முதுமொழிக்கேற்ப, தமிழ்நாட்டில் முதலீடு செய்து திரவியம் தேட நல்ல காலசூழ்நிலை உள்ளது. அமைச்சர் சொன்னது நிச்சயம் நடக்கும். எந்தத் துறையாக இருந்தாலும் வெளிநாட்டு முதலீட்டளார்கள் விரும்பி முதலீடு செய்து, வேலை வாய்ப்புக்களைப் பெருக்கும் மாநிலம் தமிழ்நாடு. கடல்சார் துறை மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?
தமிழர்களுக்கும் கடல்சார் வணிகத்திற்கும் சோழர்கள் காலத்தில் இருந்தே தொடர்பு இருக்கிறது. கொற்கை, அழகன்குளம், பூம்புகார், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய துறைமுகங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள துறைமுகங்களுடன் வர்த்தகத் தொடர்பைக் கொண்டிருந்தன. தமிழர்கள் வெளிநாட்டினரோடு இத்தகைய வர்த்தகத் தொடர்பு வைத்திருந்ததாலேயே அவர்கள் பரந்த மனம் கொண்டவர்களாக இருந்தனர். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரிகள் அந்தப் பண்பாட்டின் வெளிப்பாடுதான்.
இப்போதும் கடல்சார் வணிகத்திலும் துறைமுகச் செழிப்பிலும் வர்த்தகத்திலும் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. இப்போது அந்தச் செழிப்பை மேலும் அதிகரிக்க ஒரு வாய்ப்பு உருவாகி இருக்கிறது.