திருக்குறள் தந்த மாநிலத்திலிருந்து வருகிறேன்: ஸ்பெயினில் முதலமைச்சர் பேச்சு!
ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மேட்ரிட்டில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அப்போது அவர், “திருவள்ளுவரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் தமிழ் மொழியில்தான் திருக்குறளை எழுதினார். அவரது திருக்குறள் உலகின் 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அத்தகைய பெருமையும் பாரம்பரியமும் கொண்ட மாநிலத்தில் இருந்து நான் வந்துள்ளேன்.
உலகிலேயே அதிகம் பேசப்படும் இரண்டாவது மொழியாகவும் 20 நாடுகளின் அதிகாரபூர்வ மொழியாகவும் விளங்கும் ஸ்பானிஷ் மொழி போலவே தமிழ்மொழியும் பாரம்பரியம் மிக்கது.
கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள மொழி தமிழ் மொழி. ஸ்பெயினுக்கும் தமிழ்நாட்டிற்கும் ஒரு மிகப்பெரும் ஒற்றுமை இருக்கிறது. காளை அடக்குதல் விளையாட்டு, ஸ்பெயினின் தேசிய விளையாட்டாகவும் பாரம்பரிய விளையாட்டாகவும் விளங்குகிறது.
தமிழ்நாட்டிலும் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு எமது கலாச்சாரத்தின் சின்னமாக, உலகப்புகழ் பெற்று விளங்குகிறது.
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்காகவே தனியாக ஒரு ஸ்டேடியம் கட்டி இருக்கிறோம். வருங்காலத்தில் தமிழ்நாட்டுக்கு நீங்கள் வரும்போது அதனைப் பார்க்கலாம்” என்று குறிப்பிட்டார்.