திமுக முப்பெரும் விழாவும் 2026 தேர்தலுக்கான வியூகமும்… மு.க. ஸ்டாலின் அழைப்பின் பின்னணி!

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு கிடைத்த 40/40 என்ற வெற்றி, முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. மேலும், நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் சட்டமன்ற வாரியாக கிடைத்த வாக்குகளின் அடிப்படையிலான புள்ளி விவரங்களைப் பார்க்கும்போது திமுக கூட்டணி, மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 221 தொகுதிகளில் முதலிடம் பிடித்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் இதேபோன்ற வெற்றியைக் குவித்திட வேண்டும் என்பதில் முனைப்பாக உள்ள திமுக தலைமை, கட்சியினரை உற்சாகப்படுத்திடும் வகையில், கோவையில் நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த வெற்றியை முப்பெரும் விழாவாக கொண்டாட உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, ஜூன் 8 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மக்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ‘கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிறைவு, 40 மக்களவை தொகுதிகளிலும் வெற்றியளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, வெற்றிக்கு கட்சியை வழிநடத்திச்சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழாவை கோவையில் நடத்துவது’ எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

40/40 வெற்றியால் கிடைத்த இலாபம் என்ன?
அதன்படி, வருகிற 15 ஆம் தேதி மாலை 4 மணிக்கு கோவை, கொடிசியா மைதானத்தில் திமுக முப்பெரும் விழா நடைபெறுகிறது. இதனையொட்டி, திமுக-வினருக்கு அழைப்புவிடுத்து முதலமைச்சரும் கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள மடலில், 2026 சட்டமன்றத் தேர்தல் களத்திற்கு இப்போதே ஆயத்தமாக வேண்டும் என்றும், அதற்கு கட்சியினர் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்தும் அறிவுறுத்தி உள்ளார்.
இது குறித்த அவரது மடலில், “ ஒன்றிய அரசில் பங்கேற்கும் வாய்ப்பில்லாத போது நாற்பதுக்கு நாற்பது என்ற வெற்றியால் தமிழ்நாட்டிற்கு என்ன இலாபம் என்று நமக்கு எதிர்முகாமில் இருக்கும் சிலர் கேட்பதைக் கவனிக்கிறேன். அது கேள்வி அல்ல, அவர்களின் தோல்விப் புலம்பல்.
நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை அறிந்தவர்களுக்கும் நன்கு தெரியும், தமிழ்நாட்டின் நாற்பதுக்கு நாற்பது உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் பரவலான வெற்றிதான், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கான கடிவாளம். இந்திய ஜனநாயகத்தின் பாதுகாப்புக் கவசம். நாடாளுமன்ற ஜனநாயகத்தின் வலிமையை உணர்ந்திருக்கும் இந்தியா கூட்டணியின் அடுத்தடுத்த நகர்வுகள்தான் இனி நாட்டின் வருங்காலத் திசை வழியைத் தீர்மானிக்கும்.

தமிழ்நாட்டில் நாம் பெற்றுள்ள வெற்றி, இந்தியா கூட்டணிக்கு மட்டுமின்றி, இந்திய ஜனநாயகத்திற்கும் நம்பிக்கையை அளித்திருப்பதால், கோவையில் நம் தோழமைக் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ள முப்பெரும் விழா என்பது மாபெரும் ஜனநாயகக் கொண்டாட்டமாக அமையவிருக்கிறது.
2026 தேர்தல் களத்திற்கு ஆயத்தமாக வேண்டும்
கழக மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், வெற்றி விழாக்கள் எதுவாக இருந்தாலும் அது வெறும் கூடிக் கலைவதற்கான நிகழ்வல்ல. ஒவ்வொரு நிகழ்வும் உடன்பிறப்புகளுக்கான பயிற்சி அரங்கம். அடுத்த களத்திற்கான ஆயத்தப் பணி. கோவை முப்பெரும் விழாவைத் தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியின் இடைத்தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறோம். அங்கும் நம் தொடர் வெற்றியினை உறுதி செய்தாக வேண்டும். அதனைத் தொடர்ந்து, ஊரக உள்ளாட்சித் தேர்தல் களம் உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, 2026 சட்டமன்றத் தேர்தல் களத்திற்கும் நாம் இப்போதே ஆயத்தமாக வேண்டும்.
எப்படி செயல்பட வேண்டும்?
மூன்றாண்டுகால திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் நேரடிப் பயன்களைத் தந்திருப்பதால் மக்களின் நம்பிக்கைக்குரியவர்களாக நாம் இருக்கிறோம். அந்த நம்பிக்கை மேலும் வலுப்பெறும் வகையில் திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்கள் தொடரும். அவை சரியான முறையில் மக்களிடம் சென்று சேர்வதையும் அதன் நீண்டகாலப் பயன்களையும் எடுத்துரைக்கக்கூடியவர்களாக உடன்பிறப்புகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் செயல்படவேண்டும்.

நாற்பதுக்கு நாற்பது என்று நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது போல, 2026 சட்டமன்றத் தேர்தலில் 200+ தொகுதிகளில் வெற்றியினை உறுதி செய்திட ஜூன் 15 கோவை முப்பெரும் விழா நமக்கு ஊக்கமளிக்கும் இடமாக அமையட்டும்! காணப் போகும் களங்கள் அனைத்திலும் கழகம் வெல்லட்டும்!! கோவை குலுங்கிட கொள்கைத் தீரர்களே திரண்டிடுக!!!” எனக் கூறியுள்ளார்.