தமிழ் காப்புத் திட்டங்கள்: முதலமைச்சர் போட்ட பட்டியல்!
தமிழ் மொழி வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புத்தக் காட்சித் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உரை வாசிக்கப்பட்டது. அதில், “வாசிப்புப் பழக்கம் என்பது ஒரு தனிமனிதரின் அறிவுத்திறத்தின் அடையாளம் மட்டுமல்ல, ஒரு சமூகம் – மாநிலம் – நாடு எந்த அளவு வளர்ந்துள்ளது என்பதற்கான அடையாளம்” என்றார் முதலமைச்சர்.
அறிவாற்றலை வாழ்நாளெல்லாம் பெற மனிதருக்குத் துணைநிற்கும் புத்தகங்களைப் போற்றுகின்ற அரசாக தமிழ்நாடு அரசு இருக்கிறது என்று அவர் கூறினார். சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகமும், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகமும் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதையும் அவர் நினைவு படுத்தினார்.
தமிழ் வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் தமிழ் காப்புத் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டார். தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை, எழுத்தாளர்கள் பிறந்தநாளில் கூட்டங்கள், குறைந்த விலையில் சங்க இலக்கிய நூல்கள் வெளியீடு, திராவிடக் களஞ்சியம் உருவாக்கம், ஊடகவியலாளர்களுக்குக் கலைஞர் எழுதுகோல் விருது, உலகப் பல்கலைக்கழகங்களில் செம்மொழித் தமிழ் இருக்கைகள், இலக்கிய மாமணி விருதுகள், உயரிய விருது பெற்ற எழுத்தாளர்களுக்குக் கனவு இல்லம், திசைதோறும் திராவிடம், முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம், சென்னை, பொருநை, சிறுவாணி, காவிரி, வைகை என இலக்கியத் திருவிழாக்கள் என்று பதினொரு திட்டங்களை பட்டியலிட்டார் முதலமைச்சர்.
இதனையடுத்து கடைசியாக, இளைஞர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில், இந்த ஆண்டு முதல் இளைஞர் இலக்கியத் திருவிழாவும் நடத்தப்பட இருக்கிறது என்றார். முதலமைச்சரின் இந்த உரையை, புத்தகக் காட்சியைத் தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசித்தார்.