தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் சென்றுள்ளார். காற்றாலை மின் உற்பத்தி, நீர் சுத்திகரிப்பு, நீர் மறுசுழற்சி ஆகிய துறைகளில் ஸ்பெயினைச் சேர்ந்த ஆக்சியானா நிறுவனம் சர்வதேச அளவில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில், ஸ்பெயின் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலிடனை, ஆக்சியானா நிறுவன முதன்மை செயல் அலுவலர் ரஃபேல் மாத்தியோ சந்தித்துப் பேசினார்.
அவரிடம், மேற்கண்ட துறைகளில் ஏற்கனவே பல முக்கியமான நிறுவனங்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தார். ஆக்சியானா நிறுவனம், தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்குரிய வாய்ப்புகள் குறித்து விளக்கினார். இதனைத் தொடர்ந்து, மேற்கண்ட துறைகளில் முதலீடு செய்ய ஆக்சியானா நிறுவனம் ஆர்வம் தெரிவித்துள்ளது.
இதே போல ஸ்பெயினைச் சேர்ந்த ரோக்கா நிறுவனம், பீங்கான் மற்றும் வீட்டுக் கட்டுமான பொருட்களின் உற்பத்தியில் உலக அளவில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. இந்நிறுவனம் தற்போது தமிழ்நாட்டில் பெருந்துறையிலும், இராணிப்பேட்டையிலும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்நிறுவனத்தின் சர்வதேச இயக்குநர் கார்லோஸ் வெலாஸ்குயிஸ் மற்றும் இந்திய இயக்குநர் நிர்மல் குமார் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினர். சந்திப்பின் முடிவில், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், குழாய்கள் உற்பத்தி செய்யும் புதிய தொழிற்சாலையை நிறுவுவதற்கும், தற்போது ராணிப்பேட்டை மற்றும் பெருந்துறையில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யவும் ரோக்கா நிறுவனம் முன்வந்துள்ளது. இது தொடர்பாக 400 கோடி ரூபாய் முதலீடு செய்ய ரோக்கா உறுதி அளித்துள்ளது. இதன் மூலம் 200 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
வரும் நாட்களில், மேலும் பல முன்னணி நிறுவனங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலீட்டு ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளார்.