தமிழ்நாட்டில் பிறக்க ஆசைப்பட்ட வி.பி. சிங்!
வி.பி. சிங்… இந்த பெயரை உச்சரிக்கும் போது இந்தியா முழுவதும் உள்ளவர்களுக்கு மண்டல் கமிஷன் தான் நினைவுக்கு வரும் என்றால், தமிழர்களுக்கு காவிரி நடுவர் மன்றம் அமைத்தது உள்பட தமிழ்நாட்டின் மீது அவர் காட்டிய அன்பும் அக்கறையும் தான் நினைவுக்கு வரும்.
1989 ஆம் நடந்த நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜனதா தளம், திமுக, தெலுங்கு தேசம் கட்சி, அசாம் கன பரிஷத் ஆகிய கட்சிகளை இணைத்து உருவாக்கப்பட்ட தேசிய முன்னணி 143 இடங்களைப் பெற்றது. காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும் ஆட்சி அமைக்க முடியவில்லை. இடதுசாரிகள் மற்றும் பா. ஜனதா கட்சி ஆகிய கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு அளித்ததால் தேசிய முன்னணி ஆட்சி அமைத்தது. வி.பி.சிங் இந்தியாவின் ஏழாவது பிரதமராக பதவியேற்றார்.
ஆனால், மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அவர் அமல்படுத்தியதால், பா. ஜனதா ஆதரவை திரும்ப பெற்றுக்கொண்டதையடுத்து அவரது ஆட்சி கவிழ்ந்தது. பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 27 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான மண்டல் கமிஷனை அமல்படுத்தியதால், தனது பிரதமர் பதவியை இழந்த கொள்கைவாதி அவர்.
அதே சமயம் பிரதமராக அவர் இருந்தபோது தமிழகத்திற்காக அவர் செய்த நன்மைகள் பல. நீண்ட கால பிரச்னைக்குத் தீர்வு காணும் பொருட்டு, கர்நாடகாவில் தங்களது கட்சி ஆட்சியில் இருந்தபோதும், காவிரி நடுவர் மன்ற ஆணையம் அமைத்தார்.
தமிழர்கள் மீது தனி அன்பைச் செலுத்தியவர்
1989 நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய முன்னணியில் அங்கம் வகித்த திமுக ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை என்றபோதிலும் திமுகவைச் சேர்ந்த முரசொலி மாறனுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கினார் வி.பி.சிங்.
தனது ஆட்சிக் காலத்தில் தான் சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்துக்கு காமராஜர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்துக்கு அண்ணா பெயரையும் சூட்டினார்.
இலங்கையில் தமிழர் பகுதியில் முகாமிட்டிருந்த இந்திய அமைதிப் படையைத் திரும்பப் பெறும் பணியை விரைவுபடுத்தினார். அவர் பிரதமராக இருந்தபோது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் “விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் தானே?” என்று கேட்கப்பட்டபோது, “யார் யார் பயங்கரவாதிகள் என்று அடையாளம் கண்டு முத்திரை குத்த என்னிடம் அந்த ரப்பர் ஸ்டாம்ப் இல்லை” எனப் பளிச் எனக் கூறி வாயடைக்கச் செய்தார். அவரது இந்தப் பதில் குறித்து அப்போது ‘துக்ளக்’ பத்திரிகையில் சோ கடுமையாக விமர்சித்து எழுதினார். சோ ஏற்கெனவே மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அவர் அமல்படுத்தியதையும் விமர்சித்திருந்தார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி உள்பட தமிழத்தில் உள்ள திராவிட இயக்கத் தலைவர்கள் மீதும், தமிழர்கள் மீதும் தனி அன்பைச் செலுத்தியவர் வி.பி.சிங்.
தமிழ்நாட்டில் பிறக்க ஆசைப்பட்டவர்
“நான் நல்ல கொள்கைகளை பல தலைவர்கள், முன்னோடிகளிடமிருந்து தெரிந்து கொண்டிருக்கிறேன். ஆனால் சமூகநீதிக் கொள்கை, சமூகநீதி உணர்வினை கி. வீரமணி அவர்களிடமிருந்துதான் பெற்றேன். எனக்கு மறுபிறவி என ஒன்று இருக்குமானால், நான் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும்” என மிகவும் பெருமையாகக் கூறியவர் வி.பி.சிங்.
அப்படி தமிழ்நாட்டில் பிறக்க ஆசைப்பட்ட வி.பி.சிங்கின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநில கல்லூரி வளாகத்தில், ரூ.31 லட்சம் மதிப்பில், தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்ட வி.பி.சிங்கின் சிலையை, அவரது நினைவு தினத்தையொட்டி இன்று காலை 11 மணிக்கு திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!