Amazing Tamilnadu – Tamil News Updates

தமிழ்நாட்டில் கால்பதிக்கும் உலக புகழ்ப்பெற்ற ’அடிடாஸ்’ நிறுவனம்!

உலக முதலீட்டாளர் மாநாட்டை ஒட்டி சர்வதேச அளவில் புகழ் பெற்ற பல நிறுவனங்களின் முதலீடுகளை கொண்டு வர தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

உலக அளவில் புகழ் பெற்ற பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஆர்வமாக இருக்கின்றன. ஆட்டோமொபைல் தொடங்கி எலக்ட்ரானிக் வரையில் ஏராளமான முதலீடுகளை ஈர்த்து, பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழிலைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றன. அந்த வரிசையில் தோல்சாரா காலணி உற்பத்தியிலும் சாதனை படைக்க தமிழ்நாடு தயாராகி வருகிறது.

தமிழ்நாடு ஏற்கனவே தோல் காலணி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கிறது. உலக அளவிலான மொத்த தோல் பொருட்களில் 13 சதவீதம் இந்தியாவில் இருந்துதான் உற்பத்தியாகிறது. 2022 புள்ளி விபரப்படி இந்தியாவில் இருந்து 4.25 பில்லியன் மதிப்பிலான தோல்பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி உள்ளன.

அதே சமயத்தில் கடந்த 2021-22ம் ஆண்டில் தோல்சாரா காலணி ஏற்றுமதியின் மதிப்பு 214 மில்லியன் டாலர்கள்தான். இதை மாற்றி தோல்சாரா காலணி உற்பத்தியிலும் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு முனைப்புக்காட்டி வருகிறது. தோல்சாரா காலணி உற்பத்தி அதிகரிக்கும் போது, தமிழ்நாட்டின் சுற்றுச் சூழலும் மேம்படும்.

அதற்கு ஏற்றார்பால தோல்சாரா காலணி உற்பத்தியில் சிறந்து விளங்கும் தைவான் நிறுவனங்கள் தமிழ்நாட்டைத் தங்களுக்கு ஏற்ற மாநிலமாக தேர்வு செய்துள்ளன. இந்த நிறுவனங்கள் ஏற்கனவே இந்தோனேஷியா, வங்கதேசம், கம்போடியா ஆகிய நாடுகளில் தங்களின் உற்பத்தியைத் தொடங்கி உள்ளன. தற்போது தமிழ்நாட்டையும் தங்களின் பட்டியலில் இணைத்துள்ளன. பெரம்பலூர் காலணிப் பூங்காவில் ஏற்கனவே தோல்சாரா காலணி உற்பத்தியை தமிழ்நாடு தொடங்கி விட்டது. உலகப் புகழ் பெற்ற க்ராக்ஸ் ஷூ உற்பத்தி தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது நைக், அடிடாஸ், பூமா ஆகிய பிராண்டுகளின் உற்பத்தியும் தமிழ்நாட்டில் தொடங்க இருக்கிறது. தமிழ்நாட்டில் தங்களின் தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்கு தைவான் நிறுவனங்கள் ஆர்வமாக இருப்பதற்கு மிக முக்கியமான காரணம். இங்குள்ள மனித வளம்தான். குறிப்பாக பெண் தொழிலாளர்கள்.


ஏற்றுமதி ஆடை நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக காலணி உற்பத்தியில் பெண் தொழிலாளர்கள் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர். இது பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அதனால்தான் அவர்கள் தமிழ்நாட்டைத் தேர்வு செய்கின்றனர்.

தைவானைச் சேர்ந்த ஷூடவுன் மற்றும் இந்தியாவின் பீனிக்ஸ் கோத்தாரி குழுமம் இணைந்து விரைவில் தமிழ்நாட்டில் ஷூ உற்பத்தியைத் தொடங்க இருக்கின்றன. அதைத் தொடர்ந்து தைவானைச் சேர்ந்த பல நிறுவனங்களும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தங்களின் உற்பத்தியைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளன. இதுவரையில் தமிழ்நாடு 2 ஆயிரத்து 250 கோடி ரூபாய் அளவிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இந்தத் துறையில் கையெழுத்திட்டுள்ளது.

Exit mobile version