Amazing Tamilnadu – Tamil News Updates

தமிழ்நாட்டில் ஏன் முதலீடுகள் குவிகிறது? முதலமைச்சர் விளக்கம்!

சென்னையில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர், தமிழ்நாட்டில் முதலீடுகள் ஈர்க்கப்படுவதற்கு என்ன காரணம் என விளக்கினார்.

“ஒரு மாநிலத்தில், தொழில் முதலீடுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றால், அந்த மாநிலத்தின் ஆட்சி மேல் நல்லெண்ணம் இருக்கவேண்டும்! அங்கு சட்டம் – ஒழுங்கு நல்ல முறையில் பேணப்பட்டு, அமைதியான சூழல் நிலவவேண்டும்! ஆட்சியாளர்கள் மேல் உயர்மதிப்பு இருக்கவேண்டும்! அந்த மாநிலத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக இருக்கவேண்டும்! 2021-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது முதல், இந்த அம்சங்களெல்லாம் தமிழ்நாட்டில் இருப்பதால்தான், தொழில் துறையில் ஏராளமான முதலீடுகள் குவிகிறது! முதலீட்டாளர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று முன்கூட்டியே கணித்து, இன்றைய தமிழ்நாடு அரசு செயல்படுகிறது.

வணிகம் புரிதலை எளிதாக்கி வருகிறோம். திறன்மிகு பணியாளர்களை உருவாக்கி வருகிறோம். நாளைய தொழில் மாற்றங்களைக் கணித்து வைத்திருக்கிறோம். தொழிலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களிடையே இணைப்பினை ஏற்படுத்தி வருகிறோம். தொழிற்சாலைகளுக்கேற்ற தொழிலாளர்களை தயார்படுத்தி வருகிறோம். ‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளித்து வருகிறோம். இளைஞர்களின் திறனுக்கேற்ற வேலைகளை உறுதி செய்து தருகிறோம்” என்று அவர் கூறினார்.

“கடந்த இரண்டரை ஆண்டு ஆட்சிக்காலத்தில், பெருமளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டதால், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகள் உருவாக்குகின்ற வகையில், 200-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது” என்று கூறினார்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே தங்களுடைய தொழில்திட்டங்களை அமைத்திருக்கிற பல நிறுவனங்கள், தங்களுடைய திட்டங்களை நன்றாக விரிவுபடுத்தியிருக்கிறார்கள் என்பது, தமிழ்நாட்டின் சிறப்பான தொழில் சூழலுக்கான அத்தாட்சி! மிகப்பெரும் தொழில் நிறுவனங்களான, ஹூண்டாய், டாடா போன்ற நிறுவனங்கள், தங்கள் முதலீடுகளை பன்மடங்கு அதிகரித்துள்ளன. 130-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தங்களுடைய திட்டங்களை நிறுவியிருப்பது, தமிழ்நாட்டில் முதலீட்டுக்கான சிறந்த சூழல் அமைந்திருப்பதற்கு ஒரு சான்று! முதலீடுகளை ஈர்க்கின்ற மாநிலங்களில், இந்திய அளவில் தமிழ்நாடு முன்னணி நிலை வகிக்கிறது! உலக அளவிலான முதலீட்டாளர்களை நன்கு வரவேற்கும் மாநிலமாக அதாவது ‘Most Welcoming State-ஆக தமிழ்நாடு இருக்கிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பணியாளர்கள் மிகவும் திறமையானவர்கள். முதலீட்டாளர்களுக்கு தேவையான அனைத்து சேவை ஆதரவுகளையும் தமிழ்நாடு அரசு அளித்து வருகிறது. அனைத்து துறைகளிலும் திறன்மிகு பணியாளர்களை இந்த மாநிலம் கொண்டுள்ளது” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Exit mobile version