தமிழ்நாட்டிற்கென ஒரு தனி அத்தியாயம்: ‘சிப் வார்’ எழுத்தாளர் ச்ரிஸ் மில்லர்!
‘சிப் வார்’ ( Chip War ) என்ற புத்தகத்தை எழுதிய ச்ரிஸ் மில்லர் ( Chris Miller ), தனது அடுத்த புத்தகத்தில் தமிழ்நாட்டிற்கென்று ஒரு தனி அத்தியாயமே எழுதுவதற்கு வாய்ப்பிருப்பதாகச் சொல்லி இருக்கிறார்.
உலக முதலீட்டாளர் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக ச்ரிஸ் மில்லர் அழைக்கப்பட்டிருக்கிறார். அவர் அமெரிக்காவின் டஃப்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர். தனது ‘சிப் வார்’ புத்தகத்தில், மைக்ரோ சிப் உலகை எவ்வாறு ஆட்டிப் படைக்கிறது என்பது குறித்து விரிவாக எழுதி இருக்கிறார். நவீன உலகின் எண்ணெய் வளம் என வர்ணிக்கப்படும் மைக்ரோ சிப், சாதாரண கம்யூட்டரில் இருந்து ராணுவம் வரையில் எந்த அளவிற்குப் பயன்படுகிறது? வல்லரசு நாடுகள் ஒவ்வொன்றும், தங்களின் மேலாதிக்கத்தை நிலைநாட்ட எந்த அளவிற்கு அந்த சிப் களைப் பயன்படுத்துகின்றன என்பது குறித்தும் தனது ‘சிப் வார்’ புத்தகத்தில் விரிவாக எழுதி இருக்கிறார் மில்லர். மேலும், எலெக்ட்ரானிக் துறையின் உயிர் எனக் கருதப்படும் செமி கண்டக்டர் பற்றியும் அவர் அதில் எழுதியுள்ளார்.
உலக முதலீட்டாளர் மாநாட்டில், தமிழ்நாடு அரசு செமிகண்டக்டர் உற்பத்தியை அதிகரிக்க, அதற்கென ஒரு கொள்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் மில்லர், தான் ‘சிப் வார்’ புத்தகத்தின் இரண்டாம் பாகம் எழுதினால், அந்தப் புத்தகத்தில் தமிழ்நாட்டிற்கென்று ஒரு அத்தியாயமே எழுதுவதற்கு வாய்ப்பிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
செமிகண்டக்டர் உற்பத்தியைப் பொறுத்தவரையில், சீனாவிற்கு வெளியே பல்வேறு நாடுகளில் உற்பத்தியைத் தொடங்க பன்னாட்டு நிறுவனங்கள் ஆர்வமாக இருக்கின்றன. ஏனெனில், தற்போது சீன பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கிறது. அதே சமயத்தில், தொழிலாளருக்கான சம்பளம் அதிகரித்து வருகிறது. ஆனால், இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியில் இருக்கிறது. இந்தியாவில் குறைந்த சம்பளத்திற்கு பணியாளர்கள் கிடைக்கின்றனர். அதுவுமில்லாமல் சிப் தயாரிப்பு, ஒன்றிணைத்தல், சோதனை, எலெக்ட்ரானிக் பொருட்களில் சிப் பொருத்துதல் எனப் பல்வேறு தொழில்கள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன.
“அடுத்த 10 ஆண்டுகளில் செமிகண்டக்டர் துறையில், இந்தியா ஒரு மிகப்பெரிய அளவில் பங்கு அளிக்கக் காத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக தமிழ்நாடு, குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் செமிகண்டக்டர் உற்பத்தியில் முக்கியமான இடத்தைப் பெற உள்ளன” என்று மில்லர் குறிப்பிடுகிறார்.
“தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், இரண்டு சுவாரஸ்யமான அம்சங்கள் உள்ளன. ஒன்று, தமிழ்நாட்டில் எலெக்ட்ரானிக் சாதனங்கள் உற்பத்திக்கு உகந்த சூழல் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கார்கள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன. ஸ்மார்ட் போன் தயாரிப்பில் வளர்ந்து வரும் மையமாகவும் தமிழ்நாடு திகழ்கிறது. இவை இரண்டுக்குமே மைக்ரோ சிப்கள் அவசியம். ஒரு சிப் தொழிற்சாலையை நீங்கள் உருவாக்க முயன்றால், அது ஒரு முக்கியமான அம்சம். அதை தான் தைவானும் தென்கொரியாவும் ஆரம்பித்துள்ளன. இரண்டாவதாக, சிப் உருவாக்கத்திற்கான திறமையாளர்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றனர்” என்று மேலும் கூறுகிறார் மில்லர்.