வேளாண் பட்ஜெட்: 15,280 வருவாய் கிராமங்களில் ‘ஒரு கிராமம் ஒரு பயிர்’ திட்டம்!
தமிழ்நாடு சட்டசபையில் இன்று 2024-25 ஆம் நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ‘ஒரு கிராமம் ஒரு பயிர்’ திட்டம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
இது தொடர்பாக பேசிய அவர், “ஒரு கிராமத்திற்கு ஒரு பயிர் – விதைப்பு முதல் அறுவடை வரை அனைத்துத் தொழில்நுட்பங்கள் குறித்த செயல்விளக்கங்கள், நிரந்தர பூச்சி கண்காணிப்புத் திடல்கள் அமைத்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, ‘ஒரு கிராமம் ஒரு பயிர்’ திட்டம், 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும்” என்ற தகவலை தெரிவித்தார்.
மேலும், ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு, உற்பத்தி, உற்பத்தித் திறனை அதிகரிக்க, தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்திற்கு ரூ.65.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், பயிர் உற்பத்தித்திறன் உயர்த்துதல் ஊக்குவிப்புத் திட்டம்-ரூ. 48 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் வெளியிட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் வருமாறு:
தேவைக்கேற்ற உற்பத்தியை எட்ட வேளாண் பயிர்களில் பரப்பு விரிவாக்கம்- ரூ. 108 கோடி நிதி ஒதுக்கீடு. ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு, உற்பத்தி, உற்பத்தித் திறனை அதிகரிக்க தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்திற்கு ரூ.65.30 கோடி நிதி ஒதுக்கீடு. மாநில அளவில் சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய்வித்துகள், கரும்பு பயிர்களில் அதிக உற்பத்தியைப் பெறும் முதல் மூன்று விவசாயிகளுக்கு பரிசளிக்க ரூ. 55 லட்சம் நிதி ஒதுக்கீடு. மரவள்ளிப்பயிரில் மாவுபூச்சியை கட்டுப்படுத்த ரூ.1 கோடி பின்னேற்பு மானியம் வழங்கப்படும்.
சிறந்த விவசாயிகளுக்கு ‘நம்மாழ்வார் விருது’
உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு ‘நம்மாழ்வார் விருது’ வழங்க ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கீடு. நெல் ஜெயராமன் மரபுசார் நெல் இரகங்களை பாதுகாக்க 200 மெ.டன் பாரம்பரிய நெல் இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு 10,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு.
முக்கனி மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டம் செயல்படுத்திட ரூ. 41.35 கோடி ஒதுக்கீடு. நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தின் கீழ் உற்பத்தித் திறனை மேம்படுத்த ரூ.773.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படாத சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்க மற்றும் பரவலாக்க ரூ.1.48 கோடி நிதி ஒதுக்கீடு.
கரும்பு சாகுபடி மேம்பாட்டுக்கு ரூ.20.43 கோடி
ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நியாயமான மற்றும் ஆதாய விலைக்கு மேல், முன் எப்போதும் இல்லாத அளவில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.215 சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ. 250 கோடி நிதி ஒதுக்கீடு. கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.43 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சர்க்கரை ஆலைகளின் செயல் திறனை அதிகரிக்க ரூ. 12.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 2023-2024 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும்.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவல்ல சிவன் சம்பா போன்ற மருத்துவ குணம் கொண்ட பாரம்பரிய நெல் இரங்கள், 1,000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திட விதை விநியோகிக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்படாமல் இருந்த பாசன மின் இணைப்பிற்கான விண்ணப்பங்களில், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1.50 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்பது உள்ளிட்ட மேலும் பல்வேறு அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.