“தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பு இந்திய சராசரியை விட அதிகம்!” – ஏன்… எப்படி?
“தமிழ்நாட்டின் வளர்ச்சியை மற்ற இந்திய மாநிலங்களுடன் ஒப்பிடக் கூடாது. மாறாக, வளர்ந்த ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சியுடன் ஒப்பிட்டு, அதை எப்படி முறியடிக்க முடியும் என்பதற்கான திட்டங்களை வகுத்துச் செயல்பட வேண்டும்” என்பதை அரசு அதிகாரிகள் மற்றும் தனது அமைச்சரவை சகாக்களுடனான ஆலோசனை கூட்டத்தின்போதும், அரசு விழாக்களின் போதும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தவறாமல் வலியுறுத்தி வருகிறார்.
முதலீட்டு ஒப்பந்தங்கள்
அவரது இந்த வலியுறுத்தலுக்கு முக்கிய காரணம், ‘வருகிற 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாக உயர்த்திட வேண்டும்’ என்ற அவரது லட்சியமும் இலக்கும் தான். அதே சமயம், தனது அரசின் இந்த லட்சியத்தை எட்டுவதற்காக அவர் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதிதான், சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் குவிந்த முதலீடுகளும், அதனைத் தொடர்ந்து மேலும் முதலீடுகளைத் திரட்டுவதற்காக முதலமைச்சர் மேற்கொண்ட ஸ்பெயின் பயணமும். இதன் பயனாக, வரிசையாக பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, தூத்துக்குடி உட்பட மாநிலத்தின் பல இடங்களில் வெவ்வேறு தொழிற்சாலைகள் தொடங்க அந்த நாட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
MSME துறையில் கவனம்
இன்னொருபுறம், சென்னை மட்டுமல்லாது திருச்சி, கோவை, மதுரை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்ப பணிகள் சார்ந்த ஐடி பூங்காக்களை உருவாக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கூடவே, பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME)துறையின் முன்னேற்றத்திலும் தீவிர கவனம் செலுத்தப்படுகிறது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், பெரு நிறுவனங்களைவிட, குறைந்த முதலீட்டில் வாழ்வாதார மூலங்களை வழங்கி, ஒட்டுமொத்த சமூக – பொருளாதார மற்றும் உற்பத்தி வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கின்றன. இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டும், மாறி வரும் சூழலுக்கு ஏற்பவும் MSME துறையின் தொழில் கொள்கைகளை மாற்றியமைத்து வருகிறது தமிழ்நாடு அரசு. அந்த வகையில், எலெக்ட்ரானிக்ஸ், விண்வெளி மற்றும் பாதுகாப்பு, ஜவுளி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கூறுகள், சில்லறை வர்த்தகம் மற்றும் தளவாடங்கள் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட துறைகளில் எத்தகைய முக்கிய மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்பது குறித்து ஆலோசனைகளையும் செயல்திட்டங்களையும் வகுப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
தனிப்பாதையில் தமிழகம்
இவ்வாறாக, தமிழ்நாடு முதலீடுகளை ஈர்ப்பதிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் இந்தியாவின் இதர மாநிலங்கள் செல்லும் பாதைகளிலிருந்து விலகி, தனக்கென தனிப் பாதை வகுத்துச் சென்று வெற்றிபெற்று வருவதாக அண்மையில் அமெரிக்க பத்திரிகையான ‘நியூயார்க் டைம்ஸ்’ பாராட்டி இருந்தது. மேலும், இந்திய அளவில் தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களில் 43 சதவீதம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் அது தனது கட்டுரையில் அப்போது குறிப்பிட்டிருந்தது.
அதிக வேலைவாய்ப்பு
இப்படி தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளின் பலனாக, தமிழகத்தின் வேலைவாய்ப்பு, நாட்டின் சராசரியை விட மிக அதிகமாக இருப்பதாக என்று மாநில தகவல் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை, ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற ‘PALS-ECU சைபர் எட்ஜ் 2024’ என்ற மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிய பழனிவேல் தியாகரன், இந்தியா அடுத்த தலைமுறைக்கு மனித மூலதனத்தின் முன்னோடியாக இருக்கப் போவதாகவும், ஆஸ்திரேலியாவுடன் இணைந்து PALS இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருப்பதில் தாம் மகிழ்ச்சி கொள்வதாகவும் தெரிவித்தார். அத்துடன், இளைய தலைமுறையினரின் சிறந்த எதிர்காலத்திற்கு அவர்களை எப்படி தயார்படுத்துவது என்பதற்கான முன்னுதாரணமாக இந்த நிகழ்வு இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், தமிழ்நாடு பல தசாப்தங்களாக கல்வியில் கவனம் செலுத்தி வருவதாகவும், நாட்டின் சராசரியை விட தமிழகத்தின் வேலை வாய்ப்பு மிகவும் அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்த அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலால், உலகளாவிய மனிதவளத்தின் ஆதாரமாக தமிழகம் திகழ்வதாகவும் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.