‘தமிழகத்தில் வெப்பம் தணியும்; மிதமான மழைக்கு வாய்ப்பு!’
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னும் சில நாட்களுக்கு வெயில் வாட்டி வதைக்கும் என்றும், ஏப்ரல் 16 ஆம் தேதிக்குப் பின்னர் வெப்பநிலை சற்று குறையும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தீபகற்ப பகுதியில் உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, தமிழகத்தின் தென்பகுதி வரை நீடிப்பதால், மாநிலத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்பதால், தினசரி வெப்பநிலையின் அளவு குறையலாம். இதனால், கடுமையான வெப்ப அலையில் சிக்கித் தவிக்கும் இடங்களில் தற்காலிக நிவாரணம் கிடைக்கும். தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளில் அடுத்த சில நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைய வாய்ப்புள்ளதாகவும் அம்மையம் மேலும் தெரிவித்துள்ளது.
வெப்ப நிலை
ஏப்ரல் 15 வரை தமிழகத்தின் தென் டெல்டா மாவட்டங்களில் மிதமானது முதல் லேசான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வளிமண்டலத்தின் மேல் மற்றும் கீழ் அடுக்குகளில் காற்றின் திசையில் ஏற்படும் ஏற்ற இறக்கம் காரணமாக இந்த மழை பொழிவு இருக்கக்கூடும்.
தமிழகத்தின் சில பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் கிழக்கு திசைக் காற்று காரணமாக அடுத்த சில நாட்களில் வெப்பநிலை குறையும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். இருப்பினும், தமிழகத்தின் சில உள் மாவட்டங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தொட வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை வியாழக்கிழமை, திருப்பத்தூரில் பகலில் 41.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உச்சத்தை எட்டியதால் அங்கு கடும் வெப்பம் நிலவியது. இதற்கிடையில், ஈரோட்டில் ஏப்ரல் முதல் தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், நேற்று அங்கு, வெப்ப நிலை மீண்டும் 40 டிகிரி செல்சியஸைத் தொட்டது.
கரூர், தருமபுரி, வேலூர், சேலம் போன்ற இடங்களில் 40 டிகிரி அல்லது அதற்கு மேல் வெப்ப நிலை உயர்ந்து காணப்பட்ட நிலையில், நேற்று அங்கு வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்குக் கீழே குறைந்து காணப்பட்டது. சென்னையில் நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் முறையே 34.9 டிகிரி செல்சியஸ் மற்றும் 36 டிகிரி செல்சியஸ் சராசரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மிதமான மழை
வியாழன் மாலை வரை எந்த வானிலை நிலையங்களிலும் மழை பதிவாகவில்லை. மாநிலத்தின் பல மாவட்டங்களில் இன்னும் கோடை மழை பெய்யவில்லை. மார்ச் 1 முதல் மாநிலத்தின் மழைப்பொழிவு 94% பற்றாக்குறையாகவே உள்ளது.
அதே சமயம் ஏப்ரல் 16-ம் தேதிக்குள் தமிழகத்தின் தென் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் சனிக்கிழமை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அம்மையம் மேலும் தெரிவித்துள்ளது. அதேபோன்று, சென்னையின் அதிகபட்ச வெப்பநிலை சனிக்கிழமை வரை 35 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.