தமிழ்நாடு சட்டப் பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்த 2024 -25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், தமிழரின் தொன்மையை அறிவதற்கான அகழ்வாய்வுப் பணிகளுக்கென 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார்.
கீழடி, வெம்பக் கோட்டை, பொற்பனைக் கோட்டை, கீழ் நமண்டி, திருமலாபுரம், கொங்கல் நகரம், மருங்கூர், சென்னானூர் ஆகிய எட்டு இடங்களிலும் கேரளாவில் உள்ள முசிறி, ஒடிசாவில் உள்ள பாலூர், ஆந்திராவில் உள்ள வெங்கி, கர்நாடகத்தில் உள்ள மஸ்கி ஆகிய தொல்லியல் சிறப்பு மிக்க இடங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும், அதற்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
பண்டைத் தமிழரின் துறைமுகப் பகுதிகளான கொற்கை, அழகன்குளம் ஆகிய பகுதிகளின் கடலோரங்களில் 65 லட்ச ரூபாய் செலவில் முன்கள ஆய்வுவும் பின் ஆழ்கடல் ஆய்வும் மேற்கொள்ளப்படும்.
கீழடியில் கண்டறியப்பட்ட தமிழரின் தொன்மையைக் கூறும் கண்டெடுப்புகளை அனைவரும் கண்டு உணரும் வகையில், கீழடியில் திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியகம் 17 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் அறிவித்தார். அகழ்வாய்வுக்கென அதிகமான நதி ஒதுக்கிய மாநிலம் என தமிழ்நாடு பெயர் பெற்றுள்ளது எனவும் அவர் பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.