Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

தமிழ் மொழி வளர்ச்சிக்கு இந்த பட்ஜெட்டில் என்ன இருக்கிறது?

மிழ் மொழியை உலகெங்கும் கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட தமிழ் நூல்களை விட இரண்டு மடங்கு தமிழ் நூல்கள் தற்போது இரண்டே ஆண்டுகளில் மொழி பெயர்க்க தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் தமிழரின் தொன்மையைக் கண்டறியவும் அவற்றை பரப்பவும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

சிலப்பதிகாரமும் மணிமேகலையும் 25 இந்திய மற்றும் உலக மொழிகளில் மொழி பெயர்க்க 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

கல்லூரி மாணவர்களுக்கான 875 கலை அறிவியல் பாட நூல்கள் தமிழ்வழியில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் மேலும் 600 நூல்கள் மொழி பெயர்க்கப்படும் என இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரிய தமிழ் நூல்கள் மற்றும் ஆவணங்களை மின்பதிப்பாக மாற்ற இந்த ஆண்டு 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பேசப்படும் சௌராஷ்ட்டிரா, படுக மொழிகள் மற்றும் தோடர், கோத்தர், சோளகர், காணி, நரிக்குறவர் உள்ளிட்ட பழங்குடி மக்களில் மொழி வளங்களை ஆவணப்படுத்திப் பாதுகாக்க 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட தமிழ் நூல்கள் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் இடம் பெற ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கென 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மொழித் தொழில் நுட்பம் தொடர்பான புத்தொழில் நிறுவனங்களுக்கு 5 கோடி ரூபாய் நிதி உதவி செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version