சிஏஏ சட்டம்: விஜய் இன்னும் கடுமையாக எதிர்த்திருக்க வேண்டுமா?
நாடு முழுவதும் சி.ஏ.ஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்தி உள்ள நிலையில், இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பி உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய்யும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கை தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கடந்த 2019 ஆம் ஆண்டு, ஒன்றிய அரசு சி.ஏ.ஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் (CITIZENSHIP AMENDMENT ACT – CAA) திருத்தம் கொண்டு வந்தது. மேலும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் (NRC) அறிமுகப்படுத்தியது.
சி.ஏ.ஏ சட்டம் சொல்வது என்ன?
“பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து எவ்வித ஆவணங்களுமின்றி, டிசம்பர் 31, 2014 முன்பாக இந்தியாவில் குடியேறியிருக்கும் இந்துக்கள், பௌத்தர்கள், கிறித்தவர்கள், பார்சிக்கள், சமணர்கள் மற்றும் சீக்கியர்கள் ஆகிய மதப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களைச் சட்டவிரோதக் குடியேறிகளாகக் கருதக்கூடாது. மேலும், அவர்கள் மீது கடவுச்சீட்டுச் சட்டம், வெளிநாட்டினர் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தால், அவ்வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, குடியுரிமை வழங்கப்படும்” என சி.ஏ.ஏ சட்டத் திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம், இஸ்லாமியர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு இது பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இச்சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் பெரும் போராட்டம் வெடித்த நிலையில், கொரோனா பேரிடர் வந்ததால் சி.ஏ.ஏ சட்டத்தை அமல்படுத்துவதை ஒன்றிய அரசு கிடப்பில் போட்டிருந்தது. தற்போது, நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சி.ஏ.ஏ சட்டத்தை அமல்படுத்துவதாக ஒன்றிய அரசு நேற்று அறிவித்தது.
விஜய் விடுத்த அறிக்கை
இதற்கு திமுக, காங்கிரஸ், அதிமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய்யும் இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்த சுருக்கமான அறிக்கையில், “சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (CAA) போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
எதிர்ப்பில் கடுமை இல்லையா?
இந்த நிலையில், “2026 தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புதிதாக அரசியல் கட்சியைத் தொடங்கி உள்ள ஒரு கட்சி, தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்னைக்கு இப்படியா ‘வழ வழா கொழ கொழா…’ என மூன்று, நான்கு வரிகளில் ஒரு அறிக்கையை விடுவது?
சி.ஏ.ஏ சட்டத்துக்கு எதிராக திமுக ஏற்கெனவே 2019 ஆம் ஆண்டிலேயே கண்டனத்தைப் பதிவு செய்துவிட்ட நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், கடந்த 8-9-2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, அரசின் சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஒன்றிய அரசுக்கு அதனை அனுப்பி வைக்கப்பட்டது.
இப்படி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது நிலைப்பாட்டைத் தெளிவாக அறிவித்துவிட்ட பின்னரும், சி.ஏ.ஏ சட்டத்தைக் கொண்டு வந்த ஒன்றிய அரசுக்கு எதிராக தனது அறிக்கையில் எதிர்ப்போ அல்லது கண்டனமோ தெரிவிக்காத விஜய், ‘தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்’ என்று கூறி இருப்பது அபத்தமானது. சி.ஏ. ஏ சட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவிக்க விரும்புவர், தனது எதிர்ப்பை இன்னும் கடுமையாக தெரிவித்திருக்க வேண்டாமா..? ஒரு பிரச்னை அல்லது கொள்கையில் தனது நிலைப்பாட்டை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தால் தான், கட்சியின் கருத்து மக்களிடையே சென்று சேரும்” என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இன்னொரு புறம் சி.ஏ.ஏ சட்டத்துக்கு எதிராக விஜய் எதிர்ப்பு தெரிவித்ததற்காக, தமிழக பாஜக-வினர் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் விஜய் ஆதரவாளர்களோ, “உறுப்பினர் சேர்க்கை, மக்களை நேரில் சந்திப்பது, கட்சியின் கொள்கையை வகுப்பது போன்ற பணிகள் எல்லாம் மெல்ல மெல்ல தான் வேகம் பிடிக்கும். அதன் பின்னர் தான் கட்சி ஒரு முழுமையான நிலைக்கு வரும். எனவே, தற்போதைக்கு இந்த எதிர்ப்பு போதுமானதே…” எனப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த கருத்துகள் எல்லாம் விஜய்யின் கவனத்திற்கு செல்லாமல் இருக்காது என்பதால், வரும் நாட்களில் அவரது அரசியல் எக்ஸ்பிரஸ் மேலும் வேகம் பிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.