ஜாபர் சாதிக் விவகாரம்: டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்… முடிவுக்கு வந்த சர்ச்சை!
டெல்லியில் பிடிபட்ட போதைப் பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளியாக குற்றம் சாட்டப்படுபவர் ஜாபர் சாதிக். தற்போது தலைமறைவாக உள்ள இவரை, முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ் சந்தித்தது, குறித்து சில அரசியல் கட்சிகள் சர்ச்சையைக் கிளப்பின. இந்த நிலையில், அந்த சந்திப்பு எதனால் நடந்தது என்பது குறித்து சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மாநில காவல்துறை, அதன் ஒரு பகுதியாக போதைப் பொருள் ஒழிப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பள்ளி, மாணவ, மாணவிகள் இடம் பெற்றுள்ள நிலையில், அவர்களுக்கான பயிற்சி வகுப்பு முகாமை, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டிஜிபி சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து போதைப் பொருள் ஒழிப்பை முன்வைத்து தமிழ்நாடு காவல்துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் விரிவாக விளக்கினார். அப்போது, ஜாபர் சாதிக் தொடர்பாக அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விகள் குறித்துப் பேசிய அவர், ஒரு நபர் (ஜாபர் சாதிக்) பிடிபட்டதை வைத்து ஒட்டுமொத்த காவல்துறையையும் குறைசொல்வது தவறு என்றும், குறிப்பிட்ட அந்த நபரை (ஜாபர் சாதிக்) தாம் சென்னை காவல் ஆணையராக இருந்தபோது, சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்ததாகவும் கூறினார்.
இது தொடர்பாக தொடர்ந்து பேசிய அவர், “சிசிடிவி கேமராக்களை பொருத்துவதற்கு உதவி செய்த வங்கி அதிகாரிகளும், பல்வேறு நன்கொடையாளர்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களில் ஒருவர்தான் அந்த நபர் ( ஜாபர் சாதிக்). தற்போது அந்த நபர் நன்கொடையாக கொடுத்த 10 சிசிடிவி கேமராக்களும் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளன. அதற்குப் பதிலாக, 10 புதிய கேமராக்களை நாங்களே பொருத்தி உள்ளோம்.
அந்த நபரை கைது செய்வதற்கு மத்திய போதை பொருள் தடுப்பு போலீஸாரிடம் இருந்தோ, டெல்லி போலீஸாரிடமிருந்தோ தமிழக போலீஸாரிடம் எந்த உதவியும் கோரப்படவில்லை. டெல்லியில் பறிமுதல் செய்யப்பட்டது 50 கிலோ போதைப் பொருளுக்கான மூலப்பொருள் தான். அதன் மதிப்பு ஒரு கிலோ ரூ.4 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரைதான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அப்படியெனில் அதன் மதிப்பு என்ன என்பதை கணக்கிட்டு கொள்ளுங்கள். ஆனால், ரூ. 2 ஆயிரம் கோடி என்று வெளியான தகவல் தவறானது.
ஜாபர் சாதிக் மீது சென்னை போலீஸில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் ஒன்று 2013 ஆம் ஆண்டில் எம்கேபி நகரில் பதியப்பட்ட வழக்கு. இதில் விடுதலையாகி இருக்கிறார். போலி பாஸ்போர்ட் வழக்கில் 2021 ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டதற்கான தகவல்கள் எதுவும் இல்லை” என விரிவாக விளக்கினார்.
டிஜிபி சங்கர் ஜிவாலின் இந்த விளக்கத்தைத் தொடர்ந்து, இது தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.