‘போதைப் பொருள் ஒழிப்பில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் தமிழ்நாடு… கண்காணிப்பில் 40,000 போ்!’
டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார், அண்மையில் டெல்லி மேற்கு பகுதியில் உள்ள கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோன் ஒன்றிலிருந்து, போதைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் 50 கிலோ ரசாயனப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் முக்கிய குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது.
போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையை காவல் துறை முடுக்கிவிட்டுள்ளது. போதைப் பொருளை ஒழிப்பது, போதைப் பொருள் பயன்பாடு மற்றும் தேவையைக் கட்டுப்படுத்துவது போன்ற 2 வகையான நடவடிக்கைளை காவல்துறை மேற்கொண்டதால், கஞ்சா விற்பனை,கடத்தல் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் கஞ்சா பயன்படுத்துபவா்கள், போதை மாத்திரைகளைப் பயன்படுத்த தொடங்கி விட்டனா். போதை மாத்திரை விற்பனையைத் தடுக்க, 960 மருந்து கடைகளில் திடீா் சோதனை நடத்தப்பட்டு, 9 மருந்து கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 90 கடைகளின் உரிமம் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
முதல் மாநிலம் தமிழ்நாடு
இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாக, இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழ்நாடு, போதைப் பொருள் ஒழிப்பில் முதல் மாநிலமாக உள்ளதாக கூறுகிறார் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கா் ஜிவால்.
சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல்துறை ஆணையரகத்தில், போதைப் பொருளுக்கு எதிரான குழுவில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமை தொடங்கி வைத்த பின்னர், சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், மதுவிலக்கு மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் ஆகியோருடன் இணைந்து நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையிலேயே இந்த தகவலை அவர் தெரிவித்தார்.
கண்காணிப்பில் 40,000 போ்
இந்த நிலையில், தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டவா்கள் 40,000 போ் காவல்துறை கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கிறார் தமிழக காவல்துறையின் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமாா் அகா்வால்.
கடந்த 2022 ஆம் ஆண்டு 28,383 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு, 14,934 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா். இது, 2019 ஆம் ஆண்டை விட 154 சதவீதம் அதிகமாகும். கடந்த 2023 ஆம் ஆண்டு, 14,770 போ் மீது மொத்தம் 10,256 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 23,364 கிலோ கஞ்சா, ஒரு கிலோ ஹெராயின், 39,910 போதை மாத்திரைகள் மற்றும் 1239 கிலோ போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. நடப்பாண்டு ஜனவரி மாதம் வரையில், 511 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு , 799 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.
அதேபோன்று, போதைப் பொருள் விற்பனையில் தொடா்ச்சியாக ஈடுபட்டதாக கடந்த 3 ஆண்டுகளில், 1501 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா். போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டவா்களின் 6,124 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 40,039 போ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.
இந்த நடவடிக்கைகள் எல்லாம், போதைப் பொருள் விவகாரத்தை தமிழ்நாடு அரசும் காவல்துறையும் எந்த அளவுக்கு சீரியஸாக எடுத்துக் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என்பதை உணர்த்துகிறது என்றே சொல்லலாம்!