“உங்கள் பெயரில் மர்ம பார்சல்…” – அரங்கேறும் நூதன மோசடி… ஏமாறாமல் இருப்பது எப்படி?
தகவல் தொழில் நுட்பத் துறை எந்த அளவுக்கு வேகமாக வளர்ந்து வருகிறதோ அந்த அளவுக்கு அதைப் பயன்படுத்தி மோசடிகளை அரங்கேற்றி, நூதன முறையில் பணத்தைப் பறிக்கும் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இதில் சிக்கி ஏமாறுவது பெரும்பாலும் சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாதவர்கள் தான். அத்தகையவர்களைக் குறிவைத்தே இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன.
அந்த வகையில், சமீப காலமாக அரங்கேறி வருவதுதான், ‘உங்கள் பெயரில் அனுப்பப்பட்ட மர்ம பார்சல் திரும்ப வந்து விட்டது. அதில் இருப்பது என்ன தெரியுமா..?’ என்ற ரீதியில் பயத்தின் டெசிபலை படிப்படியாக கூட்டி, கடைசியில் பணத்தை ஆட்டையைப் போட்டுக்கொண்டு போகும் மோசடி.
மோசடி எப்படி அரங்கேறுகிறது..?
வசதியான அதே சமயம் சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாத அப்பாவி நபரைத் தேர்ந்தெடுக்கும் மோசடிக் கும்பல், ‘பெட் எக்ஸ்’ எனப்படும் சரக்கு போக்குவரத்து மற்றும் கூரியர் நிறுவனங்களில் இருந்து அனுப்புவது போல, ‘உங்கள் பெயரில் அனுப்பப்பட்ட மர்மர் பார்சல் எங்களிடம் உள்ளது. தொடர்பு கொள்ளவும்’ எனக் குறுஞ்செய்தி அனுப்புகின்றனர்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட நபர் அந்த எண்ணில் தொடர்புகொண்டால், “உங்கள் பெயரிலான பார்சலில் சட்டவிரோதமாக பெறப்பட்ட பாஸ்போர்டுகள், கிரெடிட் கார்டுகள், சிம்கார்டுகள் மற்றும் போதைப் பொருட்கள் இருப்பதை , மும்பை போலீசார் கண்டறிந்து பறிமுதல் செய்துள்ளனர். நீங்கள் மும்பை காவல் துறை அதிகாரியிடம் பேசுங்கள்” எனக் கூறி, கான்ஃபரன்சிங் காலில் இணைக்கின்றனர்.
இதனையடுத்து எதிர்முனையில் பேசும் நபர், தன்னை காவல்துறை உயரதிகாரி எனக் கூறிக்கொண்டு, தொடர்பு கொண்ட நபரின் ஆதார் எண்
உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களைத் தெரிவித்து , “நீங்கள்தான் பார்சலில் போதைப் பொருள் கடத்தி உள்ளீர்கள். உங்களுக்கு சர்வதேச போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு உள்ளது. உங்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். மேலும், உங்கள் கூட்டாளி ஒருவரை கைது செய்துள்ளோம். அவர் போதைப் பொருள் கடத்தலில் உங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார். நீங்கள் உடனடியாக மும்பைக்கு வர வேண்டும். மறுத்தால், விடிவதற்குள் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள்” என மிரட்டுகின்றனர்.
இதனால், மிரட்டலுக்கு உள்ளான நபர் மிகவும் பயந்து விடுகிறார். சம்பந்தப்பட்ட ஆதார் எண் உள்ளிட்ட விவரங்கள் தன்னுடையது தான் என்றாலும், அதை யாரோ எப்படியோ எடுத்து தவறாக பயன்படுத்தி இருப்பதாகவும் விளக்கம் அளிக்கிறார். இதனையடுத்து நீண்ட நேர மிரட்டலுக்குப் பின்னர், அந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்வதாகவும், அதே சமயம் கைது நடவடிக்கையில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்றால், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் உங்கள் வங்கி கணக்குளை ஆய்வு செய்வர் எனக் கூறி, அடுத்ததாக ரிசர்வ் வங்கி அதிகாரி எனச் சொல்லி ஒருவரிடம் பேசச் சொல்கின்றனர்.
தொடர்ந்து தன்னை ரிசர்வ் வங்கி அதிகாரி எனச் சொல்லிக்கொண்டுப் பேசும் மர்ம நபர், “உங்கள் வங்கி கணக்கைப் பயன்படுத்தி மோசடி நடைபெற்றுள்ளதா என்பதைக் கண்டறிய, ஒரு பெரும் தொகையை நான் சொல்லும் குறிப்பிட்ட வங்கி கணக்குக்கு அனுப்பி வையுங்கள். ஆய்வு செய்த பின், பணம் திரும்ப அனுப்பப்படும். இதற்கு சம்மதம்இல்லையென்றால் சிபிஐ அதிகாரிகள் உங்கள் வீட்டிற்கு வருவர்” என மிரட்டுவார்.
அதை நம்பி மிரட்டலுக்கான நபர் பயந்து போய், அந்த வங்கி கணக்குக்கு பணத்தை அனுப்புவார். அப்படி அனுப்பிய அடுத்த நிமிடமே, அதுவரை அவரிடம் பேசிய அனைத்து நபர்களும் தங்களது இணைப்புகளைத் துண்டித்து, செல்போன்களையும் ‘சுவிட்ச் ஆப்’ செய்து விடுவர் என இந்த மோசடி குறித்த விவரங்களை விலாவாரியாக புட்டுப் புட்டு வைக்கிறார் தமிழ்நாடு சைபர் கிரைம் போலீஸ் கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார்.
ஏமாறாமல் இருப்பது எப்படி?
இத்தகைய மோசடிகளில் சிக்கி ஏமாறாமல், விழிப்புணர்வுடன் இருப்பது எப்படி என்பது குறித்த சில அறிவுரைகளையும் பொதுமக்களுக்கு சைபர் கிரைம் போலீசார் வழங்கி உள்ளனர்.
செல்போனில் திடீரென வரும் அறிமுகம் இல்லாத அழைப்புகளை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.
ஆதார் எண், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட சுய விவரங்களை அநாவசியமாக யாரிடம் தெரிவிக்கவோ பகிர்ந்துகொள்ளவோ கூடாது. ஏதாவது வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து பேசுவதாக தெரிவித்தாலும், அந்த நபர் அந்த நிறுவனத்தில் தான் பணிபுரிகிறாரா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
கூரியர் சேவைகள் அல்லது சட்ட அமலாக்க முகவர்களிடமிருந்து வரும் எதிர்பாராத அழைப்புகள் அல்லது செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சந்தேகத்திற்கிடமான தகவல்தொடர்புகளை பெற்றால், கூரியர் நிறுவனத்தை நேரடியாகத் தொடர்புகொண்டு தகவலைச் சரிபார்க்கவும்.
பார்சல் மூலம் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு உள்ளீர்கள் என மிரட்டல் வந்தாலோ அல்லது உங்கள் மொபைல் போனுக்கு வரும்
குறுஞ்செய்திகள் மீது சந்தேகம் எழுந்தாலோ அருகில் உள்ள, காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். அல்லது 1930 என்ற எண்ணில் தொடர்புகொண்டோ, www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலோ புகார் செய்யுங்கள்.