சுதந்திரம் பெறுவதற்கு முன் ஆங்கிலேய ஆட்சியில், குற்றப்பரம்பரை சட்டத்தினால் (Criminal Tribes Act) பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ‘சீர்மரபினர்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அந்த வகுப்பினர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வருகின்றனர். மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
68 சமூகங்களைச் சேர்ந்தவர்கள் சீர்மரபினர் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். சீர்மரபினருக்கு மாநில அரசின் இடஒதுக்கீடு மற்றும் நலத்திட்ட உதவிகளும், ஒன்றிய அரசின் மூலம் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இவர்களுக்கு ஒன்றிய அரசின் உதவிகளைப் பெற டிஎன்டி (Denotified Tribes), அதாவது சீர்மரபுப் பழங்குடியினர் (Denotified Communities) எனும் சான்றிதழ்களும், மாநில அரசின் உதவிகளைப் பெற டிஎன்சி சீரமரபின வகுப்பினர் என்ற சான்றிதழ்களும் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் உதவிகளைப் பெற்று வருகின்றனர்.
இனி ஒரே சான்றிதழ்
இந்த நிலையில், அவர்களுக்கு Denotified Communities மற்றும் Denotified Tribes என்று இரண்டு விதமான சான்றிதழ்களுக்குப் பதிலாக ஒரே சான்றிதழ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இனி வருவாய் அலுவலர்கள் சீர்மரபின வகுப்பினருக்கு ஒரே சான்றிதழ் வழங்குவார்கள்.