தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச உடல் பரிசோதனை!
அரசு பள்ளி ஆசிரியர்களில், 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு, முழு உடல் பரிசோதனை செய்ய, தமிழக அரசு அனுமதியளித்து அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், இத்திட்டம் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் 37,588 அரசுப் பள்ளிகளில் 2 லட்சத்து 24,035 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில், 50 வயதுக்கு மேல், 1.06 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை மூன்றாக பிரித்து , ஆண்டுக்கு 35,600 ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்ய, ஆசிரியருக்கு 1,000 ரூபாய் வீதம் 3.56 கோடி ரூபாயை, தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து மேற்கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில், தற்போது முதல்கட்டமாக அரசின் ‘கோல்டு’ திட்டத்தின் கீழ் 50 வயதுக்கு மேலான ஆசிரியர்கள் 16 விதமானபரிசோதனைகளைச் செய்துகொள்ள முடியும். மொத்தம் உள்ள 1 லட்சத்து 6,985 பேரில் ஆண்டுதோறும் 35,600 ஆசிரியர்கள் வீதம் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்நிலையில் இந்த பரிசோதனை முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் சென்னையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் முழு உடல் பரிசோதனையை ஆசிரியர்கள் செய்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்கான கால அட்டவணை மாவட்டந்தோறும் வழங்கப்பட்டு, பரிசோதனை நாளில் ஆசிரியர்களுக்கு விடுப்பு தரப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.