இனி பள்ளிகளிலேயே சாதிச்சான்றிதழ் வழங்கப்படும்… 6 ஆம் வகுப்பிலேயே வங்கிக் கணக்கு!

மிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் பொருட்டு பல்வேறு முன்னெடுப்புகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகின்றன. மாணவர்களின் கற்றலில் எவ்விதத் தொய்வும் ஏற்படாவண்ணம் அவர்களுக்கான உதவித்தொகைகள் மற்றும் ஊக்கத்தொகைகள் அனைத்தும் தங்குதடையின்றி மாணவர்களைச் சென்றடையும் வண்ணம் “நேரடி பயனாளர் பரிவரித்தனை” (DBT) முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

6 ஆம் வகுப்பிலேயே வங்கிக் கணக்கு

இந்த நிலையில், இப்பணியினை மேலும் எளிமைப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவின் பேரில், வரும் 2024-2025 கல்வியாண்டில் ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி மூலமாகவே வங்கிக்கணக்குகள் தொடங்கிடும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. அத்தருணத்திலேயே ஆதார் புதுப்பித்தல் செய்யப்பட்டு ஆதார் பதிவினை வங்கிக்கணக்குடன் இணைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும். இதன்வாயிலாக பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் சிரமம் பெருமளவில் குறைக்கப்படும்.

நால்வகைச் சான்றிதழ்கள்

மேலும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் உதவித்தொகையினைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் போதும் பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்வி பயில்வதற்கு விண்ணப்பிக்கும் நேர்விலும், வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் தருணத்திலும் சாதிச்சான்றிதழ், வருமானச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரியாக இருப்பின் அதற்குரிய சான்றிதழ் என நால்வகைச் சான்றிதழ்கள் அவசியமாகின்றன.

இந்நால்வகைச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு, மாணவர்கள் தற்போது அரசு இ-சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பித்து தேவையான சான்றிதழ்களைப் பெற்றுவருகின்றனர். அதே சமயம் இதற்காக விண்ணபிக்கும்போது இ-சேவை மையங்களில் அதிக கூட்டம் இருந்தால், அதிக நேரம் காத்திருக்கவோ அல்லது மறுநாளோ வந்து செல்ல வேண்டிய நிலை உருவாகிறது. இதனால், மாணவர்கள் மட்டுமல்லாது அவர்களது பெற்றோரும் வீண் அலைச்சலையும் சிரமங்களையும் எதிர்கொள்ள வேண்டியதுள்ளது.

இந்த நிலையில் பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் இதற்கான சிரமத்தைக் குறைத்திடும் வகையில், முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி மாணவர்கள் படிக்கும் அந்தந்தப் பள்ளிகளிலேயே வரும் கல்வியாண்டில், மாணவர்கள் ஆறாம் வகுப்பில் சேரும்போதே தேவையான ஆவணங்களை பள்ளித்தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்கும்போது, அதன் விவரங்கள் கல்வி மேலாண்மைத் தகவல் முறைமை (EMIS) தளத்தில் உள்ளீடு செய்யப்பட்டு, வருவாய்த்துறையினருக்கு அனுப்பிவைக்கப்படும்.

பள்ளியிலேயே பெறலாம்

இதனைத் தொடர்ந்து அந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு (EMIS) தளத்தின் வாயிலாகவே பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு, உரிய மாணவர்கள் வசம் சான்றிதழ்கள் வழங்கப்படும். இதனால், மாணவர்கள் தங்களுக்கு தேவையான மேற்கூறிய 4 வகையான சான்றிதழ்களையும் எளிதில் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன், 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்குப் பின்னர் உயர் கல்விக்குச் செல்லும்போது இட ஒதுக்கீடு, கல்விக் கட்டண சலுகை போன்றவற்றைப்பெற, அந்த நேரத்தில் அலைந்து திரிந்து ஓடிக்கொண்டிருக்க அவசியம் ஏற்படாது.

அனைத்து மாணவர்களும் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

有氧so young > 揮灑汗水,提高代謝量. Lizzo extends first look deal with prime video tv grapevine. 자동차 생활 이야기.