இந்தியாவிலேயே தமிழகத்திலிருந்து அதிகளவு விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்ட ‘தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை’யின் மூலம் 228 வீரர்கள் பயன்பெற்று நாட்டுக்கு பெருமை சேர்க்க காத்திருக்கின்றனர்.
தேசிய, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையிலும் உரிய பயிற்சிகள் பெறவும், போட்டிகளில் பங்கேற்க தேவையான விளையாட்டு உபகரணங்கள் வாங்கவும் போதிய நிதிவசதி இல்லாத விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குத் தேவையான நல உதவிகள் வழங்கும் வகையில் ‘தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை’ தொடங்கப்பட்டு உள்ளது. இது, தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முயற்சியால் தொடங்கப்பட்டது.
மேலும் அந்த தொடக்க நிகழ்ச்சியில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனியை அழைத்து, இந்தியா முழுவதும் விளையாட்டுத்துறைக்கு வழங்கப்பட்ட வேண்டிய முக்கியத்துவத்தையும் தமிழ்நாடு அரசு செய்து காட்டியது. தோனி போன்ற ஒரு விளையாட்டு வீரர் இது போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்றால், இதனைப் பார்த்து மற்ற மாநிலங்களில் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள திறமையான வீரர்களை ஊக்குவிக்க இந்த திட்டம் மிகவும் உதவி கரமாக இருக்கும்.
இந்த அறக்கட்டளையின் நிர்வாக நடைமுறைகளை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு, முதல் கட்டமாக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்தது. மேலும் முதலமைச்சர் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர். இந்த நிலையில், கடந்த மாதம் சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு 107 பதக்கங்கள் கிடைத்தது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 வீரர்கள் மட்டும் 9 தங்கம்,11 வெள்ளி, 8 வெண்கல பதக்கங்களை வென்று அசத்தினர். இந்தியா அளவில் அதிக பதக்க வென்ற மாநிலங்களில் தமிழ்நாடு 5 ஆவது இடத்தைப் பிடித்தது.
இந்த நிலையில் தான், இந்திய அளவில் மட்டும் இல்லாமல் சர்வதேச அளவில் நமது தமிழ்நாட்டு வீரர்கள் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில், தமிழ்நாடு அரசு சார்பாக தொடங்கப்பட்ட தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையில் இதுவரை21 கோடியே 6 லட்சத்துக்கு 2 ஆயிரத்து 121 ரூபாய் நன்கொடையாக கிடைத்துள்ளது. இதன் மூலம் 228 தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு ரூ.4 கோடியே 63 லட்சத்து 92 ஆயிரத்து 737 வழங்கப்பட்டுள்ளது. திறமை இருந்தும் நிதி வசதி இல்லாமல், பல்வேறு பயிற்சிகளைப் பெற முடியாமலும் போட்டிகளில் பங்கேற்க செல்ல முடியாமலும் தவிக்கும் திறமையான வீரர்களுக்கு உதவி செய்து, அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்க இந்த நிதி உதவும்
இந்த நிலையில், போர்ச்சுக்கல் நாட்டில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ‘வாகோ உலக கிக்பாக்சிங் (சீனியர் & மாஸ்டர்) போட்டி’யில், இந்தியா சார்பில் கலந்து கொள்ளவிருக்கிற தமிழ்நாட்டின் 8 வீரர் – வீராங்கனையர்களுக்கு, விமானக் கட்டணம், தங்குமிட செலவினம் மற்றும் போட்டிக்கான நுழைவுக் கட்டணமாக ரூ 1.50 லட்சம் வீதம் ரூ 12 லட்சத்திற்கான காசோலையினை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து, வீரர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி அனுப்பி வைத்தார்.
“தமிழ்நாட்டை விளையாட்டுத்துறையின் தலைநகராக்குவோம்” என்ற தமிழ்நாடு அரசின் எண்ணங்களை நிறைவேற்ற தேசிய, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் தமிழகத்தைச் சேர்ந்த, போதிய நிதி வசதி இல்லாத வீரர், வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்கவும், உரிய பயிற்சிகள் பெறவும் மற்றும் போட்டிகளில் பங்கேற்றிட தேவையான விளையாட்டு உபகரணங்கள் வாங்கிடவும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் நல உதவிகள் பெறலாம். இதற்காக, https://tnchampions.sdat.in/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பித்து வீரர்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம்.