தமிழகத்தை மாற்றும் ‘மஞ்சப்பை!’

பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிமுகம் செய்த ‘மீண்டும் மஞ்சப்பை திட்டம்’ தமிழ்நாட்டில் நல்ல பலனைக் கொடுக்கத் தொடங்கி உள்ளது. இத்திட்டத்தினால் தமிழ்நாட்டில் 25 சதவீதத்துக்கும் மேல் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள்தான் இன்று சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்திருக்கிறது.
இதனை கருத்தில் கொண்டே தமிழ்நாட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதுபோன்ற விஷயங்களில் அரசாங்கம் மட்டும் அல்லாமல் மக்களும் இணைந்து செயல்பட்டால்தான் அந்த திட்டங்கள் வெற்றிபெறும்.
இதனை கருத்தில் கொண்டே அன்றாட பயன்பாட்டில் மிக அதிக பங்களிக்கும் ‘பிளாஸ்டிக் பை’க்கு மாற்றாக ‘மீண்டும் மஞ்சப்பை திட்ட’த்தை கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொண்டு வந்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். இதனைத் தொடர்ந்து இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பிரசாரங்கள் தமிழகமெங்கும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
இதன் பலனாக, மக்கள் பலரும் பிளாஸ்டிக்கை தவிர்த்து மஞ்சப்பைகளை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் தமிழ்நாட்டில் 25 சதவீதத்துக்கும் மேல் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
மஞ்சப்பை திட்டத்தின் வெற்றிக்கு காரணம் என்ன?
மஞ்சப்பை திட்டத்தின் இந்த வெற்றிக்கு, தமிழக அரசு மேற்கொண்ட பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் பின்னணியில் உள்ளன. முதலாவதாக, இத்திட்டத்திற்கு தமிழக அரசு வலுவான ஆதரவை வழங்கியது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய சில பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளதுடன், மஞ்சப்பை பைகள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு மானியம் வழங்கியுள்ளது.
இந்தத் திட்டம் பொதுமக்களிடம் பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. மஞ்சப்பை பைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு பல விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.
பேரங்காடிகள், உணவகங்கள், திருமண மண்டபங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அரசு நிறுவனங்களான இருக்கும் டாஸ்மாக் நிறுவனம், அறநிலையத் துறை, உணவு பாதுகாப்புத் துறை, பசுமை குழுக்கள், தேசிய பசுமை படை என அனைவரையும் அழைத்து ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் ஒரு அம்சமாக அரசாங்கம் பொது இடங்களில் மஞ்சப்பை விற்பனை இயந்திரங்களை நிறுவியுள்ளது மற்றும் வணிக நிறுவனங்களுடன் இணைந்து தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மஞ்சப்பை பைகளை விநியோகித்துள்ளது.
விதிகளை மீறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது.
இத்தகைய நடவடிக்கைகளால்தான் மஞ்சப்பை திட்டத்தின் நோக்கம் வெற்றி பெறத் தொடங்கி உள்ளது.
மற்ற மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் முன்மாதிரியாக உள்ள இந்த மஞ்சப்பை திட்டத்தை நாமும் பின்பற்றுவதன் மூலம், நமது எதிர்கால சந்ததியினருக்கு பிளாஸ்டிக் இல்லாத உலகத்தை உருவாக்க முடியும்!