டிசம்பர் மழை வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1000 கோடி நிவாரண தொகுப்பு அறிவித்தார் முதலமைச்சர்!
டிசம்பர் மாதம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு ரூ.1000 கோடியில் மழை வெள்ள நிவாரண திட்டங்களை வழங்குவதற்கான 12 அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சர் வெளியிட்டுள்ள 12 அறிவிப்புகள் இங்கே….
சேதமடைந்த வீடுகளுக்கு புதிய வீடுகள் மற்றும் பழுதுபார்த்தல் – ரூ.385 கோடி
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழைவெள்ளத்தால் பகுதியாக சேதமடைந்த வீடுகளை பழுதுபார்ப்பதும், முழுமையாக சேதமடைந்த வீடுகளை மீண்டும் புதிதாகக் கட்டித்தருவதற்கு ரூ.4 லட்சமும், பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ. 2 லட்சமும் வரை வழங்கப்படும். இத்திட்டம் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும்செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் 4577 புதிய வீடுகள் கட்டப்படும் மற்றும் 9975 வீடுகளுக்கு பழுது நீக்கம் பணிகள் மேற்கொள்ளப்படும்.
பயிர்ச்சேத நிவாரணம் – ரூ.250 கோடி
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் சுமார் 2,64,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கென இழப்பீட்டு நிவாரணம் மொத்தம் 250 கோடி ரூபாய் வழங்கப்படும். பயிர் சேதம் நேரிட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில்கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பயிர்க் கடனும் வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்கும் கடன் வழங்கப்படும்.
விவசாயநிலங்களில் வெள்ளத்தால் அடித்துவரப்பட்ட மண் படிந்துள்ளது. இதனை அகற்றி மீண்டும் விவசாயத்திற்கு ஏற்றவகையில் சீர்செய்துதரும் பணி மாநில வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலமாக கட்டணமின்றி மேற்கொள்ளப்படும். இதற்கென வெளிமாவட்டங்களிலிருந்து தேவையான கருவிகள் மற்றும் உபகரணங்கள் வரவழைக்கப்படும்.
சிறு வணிகர்களுக்கு ரூ.1 லட்சம் வரை சிறப்பு கடன்
பெருமழையின் காரணமாக சென்னை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பெரிய பாதிப்பைச் சந்தித்த சிறு வணிகர்கள், சிறு கடை உரிமையாளர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 வரை 4 சதவீத வட்டி, ரூ.1 லட்சம் வரை 6 சதவீத வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படும்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கடன்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில் நிறுவனங்கள், தங்கள் வணிகத்தை மீண்டும் புதுப்பிக்கத் தேவையான மூலதனச் செலவு மற்றும் நடைமுறை மூலதனம் போன்ற அத்தியாவசிய செலவுகளுக்கு நிதியுதவி அளித்திட, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகத்தின் (TIIC) மூலம் மொத்தம் ரூ.100 கோடி கடனாக வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ், தொழில் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை, ஆண்டுக்கு 6% சிறப்பு சலுகை வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படும். இக்கடனை தொழில் நிறுவனங்கள் 3 மாத கால அவகாசத்துடன் 18 மாத தவணைகளில் திருப்பிச் செலுத்தலாம்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.350 கோடி கடன்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில், நடப்பு ஆண்டில், கடன் பெறத் தகுதி வாய்ந்த மகளிர் 4,000 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.350 கோடி அளவில் அவர்களுக்கு புதிய கடன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நிலுவையில் உள்ள கடன் தவணைகளுக்கு கால நீட்டிப்பு
பெருமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலுவையிலுள்ள கடன் தவணைகளை செலுத்திவதில் கால நீட்டிப்பு குறித்து மாநில அளவிலான வங்கியாளர் குழுவில் விரைவில் உரிய முடிவெடுக்கப்படும்.
சேதமடைந்த மீன்படி படகுகளுக்கு நிவாரணம் – ரூ.15 கோடி
பெருமழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாட்டங்களில் 4928 மீன்பிடி படகுகளும், இயந்திரங்களும் சேதமடைந்துள்ளன. இதற்கென நிவாரணத் தொகையாக 15 கோடி ரூபாய் வழங்கப்படும்.
கால்நடைகள் வாங்குவதற்கு கடன்
பெருமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 17,000 கால்நடைகளும் 1 லட்சத்திற்கும் மேல் கோழிகளும் உயிரிழந்தன. இறந்த கால்நடைகளுக்கு நிவாரணமாக பசு, எருமைக்கு 37,500 ரூபாய் வரையிலும், ஆடு, செம்மறி ஆடு ஒன்றிற்கு 4,000 ரூபாய் வரையிலும், கோழி ஒன்றிற்கு 100 ரூபாய் வரையிலும் வழங்கப்படும். கால்நடை இழப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய கால்நடைகளை வாங்கிட வசதியாக ரூ.1.50 லட்சம் வரை புதிய கடன் வழங்கப்படும்.
உப்பளத் தொழிலாளர்களுக்கு உதவித் தொகை – ரூ.3000
பெருமழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட உப்பளத் தொழிலாளர்களுக்கு, கூடுதல் வாழ்வாதார நிவாரணத் தொகை தலா ரூ.3000 வழங்கப்படும்.
பள்ளி, கல்லூரிச் சான்றிதழ்கள் மற்றும் பாடப் புத்தகங்கள் வழங்குதல்
வெள்ளத்தின் காரணமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சான்றிதழ்களை இழந்த மாணவர்கள், அவர்கள் படித்த பள்ளியில் விண்ணப்பம் எழுதிக் கொடுத்தால் அவர்களுக்கு அந்த பள்ளித் தலைமை ஆசிரியர் / கல்லூரி முதல்வர் மூலமாக புதிய மாற்றுச் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், புதிய பாடப் புத்தகங்கள் அவர்கள் படிக்கும் பள்ளியின் மூலமாக வழங்கப்படும்.
வருவாய்த் துறை மற்றும் இதர அரசுத் துறை சான்றிதழ்கள்
வருவாய்த் துறை மற்றும் இதர அரசுத் துறைகளில் வழங்கப்படும் சான்றிதழ்கள் / ஆவணங்கள், குடும்ப அட்டை, வாகன ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்ற அரசு ஆவணங்களை இந்த மழை வெள்ளத்தால் இழந்தவர்கள் புதிய ஆவணத்தை பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் வரும் திங்கள்கிழமை தோறும் துவங்கப்படும்.
வெள்ளத்தால் பழுதடைந்த வாகனங்களுக்கான காப்பீடு
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் காப்பீட்டு நிறுவனங்களும், வாகன தயாரிப்பு நிறுவனங்களும், முகவர்களும் சிறப்பு முகாம்கள் நடத்தி, இதுவரையில் 3,046 மோட்டார் வாகனங்கள் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக கொண்டுவரப்பட்டு, அவற்றில் 917 வாகனங்கள் பழுது நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 2,129 வாகனங்களுக்கான பழுதுபார்ப்புப் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
மேற்கூறிய இத்தகவல், தமிழக அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.