சமூகநீதிக்கு எதிரான பாஜக-வுடன் பாமக கோத்த மர்மம் என்ன – முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி!
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்து, இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் நிலையில், தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.
அந்த வகையில், முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், தருமபுரி மாவட்டம், தடங்கம் பகுதியில் நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில், தருமபுரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.மணி, கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கோபிநாத் ஆகியோரை மேடையில் அறிமுகப்படுத்தி உரையாற்றினார்.
பா.ஜ.க.வுடன் கை கோத்த மர்மம் என்ன?
அப்போது, சமூகநீதி பேசும் பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ், சமூகநீதிக்கு எதிரான பாஜக-வுடன் கை கோத்த மர்மம் என்ன என்று கேள்வி எழுப்பியதோடு, பாமக வலியுறுத்தும் ஒரு கொள்கைக்குக்கூட ஆதரவு தெரிவிக்காத, அதற்கு முற்றிலும் நேர் எதிரான கொள்கை கொண்டதுதான் பாஜக என்றும், இது மூத்த தலைவரான ராமதாஸுக்கு தெரியாதா என்றும் வினவினார்.
மேலும் பேசிய அவர், “நான் மட்டும் இதைச் சொல்லவில்லை, மனசாட்சி உள்ள பாமக தொண்டர்கள்கூட இதை ஜீரணிக்க முடியாமல் வேதனையோடு இருக்கிறார்கள்! ராமதாஸ் அடிக்கடி பேசுவாரே, மண்டல் கமிஷன்… மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தியபோது நாட்டில் திட்டமிட்டு எப்படியெல்லாம் கலவரம் செய்தது பாஜக! சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கின் ஆட்சியையே பாஜக கவிழ்த்ததே!
இப்போதுகூட, பிற்படுத்தப்பட்ட – பட்டியலின – பழங்குடி மக்களின் இடஒதுக்கீட்டை முழுமையாக ‘குளோஸ்’ செய்வதற்காக எவ்வளவு படுபாதகங்களை பாஜக செய்திருக்கிறது… அதை மறந்துவிட்டாரா?
பாமக-வின் சார்பில், இப்போது தேர்தல் அறிக்கையில் ராமதாஸ் என்ன சொல்லி இருக்கிறார்? 2021-ல் நடந்திருக்க வேண்டிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, இந்த ஆண்டு இறுதியிலே நடக்கிறது. அப்போது இந்தியா முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு, சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்தப் பாமக பாடுபடும் என்று சொல்கிறார்கள்!
சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு கேரண்டி உண்டா?
நாம் கேட்பது, தன்னுடைய ஆட்சிக் காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி இதை ஏன் செய்யவில்லை என்று கேட்டாரா? இப்போதாவது இந்தக் கோரிக்கையைப் பிரதமர் ஏற்று இருக்கிறாரா? மோடி அவர்கள் இப்போது கேரண்டி கேரண்டி என்று விளம்பரப்படுத்துகிறாரே? சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த உங்களுக்கு கேரண்டி கொடுத்தாரா? மோடி கேரண்டியில், இடஒதுக்கீட்டின் வரம்பை உயர்த்துவதற்கான உறுதிமொழி உண்டா? மோடியிடமோ, அமித்ஷாவிடமோ அதற்கான உத்தரவாதத்தை ராமதாஸ் பெற்று இருக்கிறாரா? இன்னும் சொல்ல வேண்டும் என்றால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் எடுக்கப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பைக்கூட வெளியிடாமல் முட்டுக்கட்டை போட்டதுதான் பாஜக.
இன்று இந்திய அளவில், நம்முடைய கோரிக்கையை ஏற்று, சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தவும், இடஒதுக்கீடு விழுக்காட்டை அதிகரிக்கும் வாக்குறுதி அளித்திருக்கும் ஒரே தேசிய கட்சி காங்கிரஸ். மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அதை வாக்குறுதியாகத் தந்திருக்கிறார். பாஜக தேர்தல் அறிக்கையில் அந்த மாதிரி வாக்குறுதி உண்டா? ராகுல்காந்தி அவர்கள் செல்லும் இடமெல்லாம் இதைப் பற்றி பேசுகிறாரே?
இதைச் சொன்னால், நீங்களே ஏன் நடத்தவில்லை என்று நம்மை கேட்கிறார்! நாம் மீண்டும் மீண்டும் சொல்வது, சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது, அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு, எடுக்கப்பட வேண்டியது! அதற்கான அதிகாரம் ஒன்றிய அரசிடம்தான் இருக்கிறது! மாநில அரசால் சர்வேதான் எடுக்க முடியும்! சென்சஸ் எடுக்க முடியாது! இந்த நடைமுறையெல்லாம் ராமதாஸுக்கு தெரியாது என்று நான் நினைக்கவில்லை! தெரிந்தே, இந்த அரசியலை நடத்துகிறார்!” எனக் குற்றம் சாட்டினார்.