Amazing Tamilnadu – Tamil News Updates

டான்ஃபண்ட்: முதலீட்டாளர் மாநாட்டின் மற்றொரு ஹைலைட்!

ருகிற 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில், சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு தொழில் செய்ய உகந்த மாநிலம் என்ற பெயரை எடுத்திருப்பதால், தமிழ்நாட்டில் முதலீடு செய்யவும், தொழில் தொடங்கவும் பன்னாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன.

இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என துபாய், சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்குச் சென்று பல்வேறு முதலீட்டாளர்களைச் சந்தித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த நிலையில், இந்த மாநாட்டில் மற்றொரு ஹைலைட் ஆக, டான்ஃபண்ட் (Tanfund) எனும் அமைப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த அமைப்பு முதலீட்டாளர்களையும் தொழில் முனைவோரையும் ஒன்றிணைக்கும் பாலமாக செயல்படும்.

ஸ்டார்ட்அப் டிஎன் (startupTN) இந்த டான்ஃபண்ட்டை அறிமுகப்படுத்த இருக்கிறது. ஏற்கனவே ஸ்டார்ட்அப் டிஎன், தமிழ்நாட்டில் புத்தாக்கத் தொழில் வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புத்தாக்கத் தொழில் முனைவோருக்கு, அவர்களின் தொழில் தொடர்பாக வழிகாட்டி வருகிறது. தற்போது புத்தாக்கத் தொழில் முனைவோருக்கு முதலீடு தேவைப்படும் பட்சத்தில் அதையும் ஏற்பாடு செய்து கொடுக்க ஸ்டார்ட்அப் டிஎன் தயாராகி உள்ளது. அதற்காக அது டான்ஃபண்ட் ஐ தொடங்குகிறது.

டான்ஃபண்ட் உலக அளவிலும் தேசிய அளவிலும் முதலீட்டாளர்களை அடையாளம் காணும். அவர்களை தமிழ்நாட்டில் புத்தாகத் தொழில் முனைவோருக்கு அறிமுகப்படுத்தும். இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்ய சிறந்த தொழில்கள் கிடைப்பதோடு, தொழில் முனைவோருக்கும் தேவையான நிதி கிடைக்கும்.

டான்ஃபண்ட் மூலமாக வருகிற மார்ச் மாதத்தில் 500 முதலீட்டாளர்களை கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டான்ஃபண்ட் மூலமாக ஏற்கனவே 212 முதலீட்டாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். முதலீடு கோரி, ஏற்கனவே 700 புத்தாக்கத் தொழில் நிறுவனங்கள் டான்ஃபண்ட்டில் பதிவு செய்துள்ளன.

Exit mobile version