ஆட்டோமொபைல் தலைநகராகும் தமிழ்நாடு… டாடாவின் ரூ.9000 கோடி முதலீட்டால் 5,000 பேருக்கு வேலை!

டாடா மோட்டார்ஸ் குழுமம் தமிழ்நாட்டில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ரூ.9000 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இதன் மூலம் தமிழகம், ஆட்டோமொபைல் தலைநகர் என்று சொல்லத்தக்க வகையில், இரண்டு பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தி முதலீடுகளை வெறும் 2 மாத காலத்திற்குள் ஈர்த்து, தொழில் திறனைப் பெருக்குவதில் பாய்ச்சல் காட்டி வருகிறது.
இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். இந்த இலக்கினை விரைவில் அடைவதற்காக, தமிழ்நாடு அரசின் தொழில்துறை, பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, சென்னையில் கடந்த ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகவும் சிறப்பான முறையில் நடத்தப்பட்டு, முன்னெப்போதும் இல்லாத அளவாக, ரூ.6,64,180 கோடி முதலீடு மற்றும் 26,90,657 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

டாடா மோட்டார்ஸ் ரூ. 9,000 கோடி முதலீடு
இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் குழுமம் 9,000 கோடி ரூபாய் முதலீட்டில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் வாகன உற்பத்தி தொழிற்சாலை ஒன்றை அமைக்க முன்வந்துள்ளது. சுமார் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான இந்த முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.
இது குறித்துப் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, “நாங்கள் தொழிற்சாலைகளை மட்டும் கட்டவில்லை; நாங்கள் கனவுகளைக் கட்டமைத்து, தமிழகம் பிரகாசமான மற்றும் வளமான எதிர்காலத்தை நோக்கிச் செல்வதை விரைவுபடுத்துகிறோம்” எனத் தெரிவித்தார்.
ஆட்டோமொபைல் தலைநகராகும் தமிழ்நாடு
தமிழக வரலாற்றில், கடந்த 2 மாதங்களில் 2 பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில், எந்த ஒரு மாநிலத்திலும் இவ்வளவு குறுகிய காலகட்டத்தில் இதுபோன்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது இல்லை.

இந்த முதலீட்டால், இந்தியாவின் தன்னிகரற்ற ஆட்டோமொபைல் தலைநகராக தமிழ்நாடு தனது நிலையை மென்மேலும் உறுதிப்படுத்துவதாகவும், கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது ஹூண்டாய் நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு மேற்கொண்டதால் ஏற்பட்ட தாக்கத்தை இது நினைவூட்டுவதாக உள்ளது என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், வெளிநாடுகளிலிருந்து வரக்கூடிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முதல் தேர்வாகத் தமிழ்நாடு இருக்கிறது. முதலீடு தொடர்பாக அவர்கள் நமது முதலமைச்சரின் கதவைத்தான் முதலில் தட்டுகின்றனர். தொழில்துறையில் தமிழ்நாடு மிகவும் வளர்ச்சி அடைந்த ஒரு மாநிலமாக உள்ளது. இதற்கு தமிழகத்தில் இருக்கும் சாதகமான சூழல், கட்டமைப்பு வசதிகள், தொழிற்சாலை அமைக்க ஏதுவான இடங்கள் போன்றவற்றைக் கருத்தில்கொண்டு பல புதிய தொழில் துறை நிறுவனங்கள், இங்கு தங்களது தொழிற்சாலைகளைத் தொடங்குகின்றன.

தமிழ்நாட்டில் எவ்வளவு கோடி முதலீடு வருகிறது என்பதைவிட எப்படிப்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது என்பதுதான் முக்கியம். 2021 ஆம் ஆண்டு முதல் இன்று வரை, கிட்டத்தட்ட 10 லட்சம் கோடிக்கு மேல் தொழில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.