“டாக்டர் பட்டத்தை விட ‘சங்கரய்யா’ என்ற பெயர்ச்சொல் மேலானது!”
மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான என். சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் ( மதிப்புறு முனைவர் ) பட்டம் வழங்குவதற்கு தமிழக ஆளுநர் ஆர். என். ரவி ஒப்புதல் அளிக்க மறுத்ததற்கு பல்வேறு கட்சியினரும் வேதனை தெரிவித்த நிலையில், அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
மாணவப் பருவத்திலேயே பொதுவாழ்வுக்கு வந்தவர் என்.சங்கரய்யா. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது சுதந்திரப் போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். இதனால், கல்லூரி படிப்பை முடிப்பதற்கு முன்பே பல முறை சிறையில் அடைக்கப்பட்டார். தன் கல்லூரி இறுதியாண்டுத் தேர்வுக்கு 15 நாட்கள் முன்பு கைது செய்யப்பட்டதால், தான் படித்த பி.ஏ. தேர்வை அவரால் எழுத முடியாமல், பட்டப்படிப்பை கைவிட நேர்ந்தது.
நாட்டின் சுதந்திரம் அறிவிக்கப்படுவதற்கு 12 மணி நேரத்துக்கு முன்புதான், மதுரை சதி வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த தோழர் பி.ராமமூர்த்தி, கே.டி.கே.தங்கமணி உட்பட 30-க்கும் அதிகமான தோழர்களுடன் சங்கரய்யா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். வெவ்வேறு காலகட்டங்களில் தன் வாழ்க்கையின் 8 ஆண்டுகளை சிறையிலும், 5 ஆண்டுகள் தலைமறைவு வாழ்விலும் கழித்த புரட்சியாளர் அவர்.
இந்த நிலையில்தான், சங்கரய்யாவின் பொது வாழ்க்கையைப் போற்றும் விதமாக கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு “தகைசால் தமிழர்” விருது வழங்கி கவுரவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சங்கரய்யாவுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் அவருக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சார்பாக கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கு ஆவன செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி கடந்த அக்டோபர் மாதம் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க காமராசர் பல்கலைக் கழக ஆட்சிமன்றக் குழு முடிவெடுத்த நிலையில், பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் தனக்கான அதிகாரத்தைப் பயன்படுத்தி, அதற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் ஆர்.என். ரவி மறுத்துவிட்டார். இதற்கு திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் கண்டனமும் வேதனையையும் தெரிவித்திருந்தனர். மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையே கூட “சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார். ஆனாலும் ஆளுநர் ரவி அசைந்து கொடுக்கவில்லை.
“சங்கரய்யா என்ற பெயர்ச்சொல் மேலானது”
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்த பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து,
“டாக்டர் பட்டத்தைவிட
சங்கரய்யா என்ற
பெயர்ச்சொல் மேலானது
இந்தத்
தப்புத் தாமதத்திற்குப் பிறகு
ஒப்புதல் தந்தாலும்
பெரியவர் சங்கரய்யா
அதை இடக்கையால்
புறக்கணிக்க வேண்டும்
பெயருக்கு முன்னால்
அணிந்து கொள்ள முடியாத
மதிப்புறு முனைவர்
பட்டத்தைவிடத்
தீயைத் தாண்டி வந்தவரின்
தியாகம் பெரிது
கொள்கை பேசிப் பேசிச்
சிவந்த வாய் அவருடையது
இனி இந்த
வாடிப்போன வெற்றிலையாலா
வாய்சிவக்கப் போகிறது?” என்று கூறியிருந்தார்.
வைரமுத்து சொன்னது போன்றே “டாக்டர் பட்டத்தை விட சங்கரய்யா என்ற பெயர்ச்சொல் மேலானது” என்பதை உணர்த்திடும் வகையில் அமைந்துள்ளது
‘தோழர் சங்கரய்யாவின் உடல், அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்’ என்ற முதலமைச்சரின் அறிவிப்பு!