மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தைத் திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அப்போது அவர், “ஏறுதழுவதல் போட்டி மீது கருணாநிதிக்குத் தனி பாசம் உண்டு. அதனால்தான், தன்னுடைய மூத்த பிள்ளையான முரசொலியின் சின்னமாக, ஏறுதழுவுதல் காட்சியை வைத்தார்” என்று கூறினார்.
“1974-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் ஏறுதழுவுதல் போட்டிகளை கருணாநிதி நடத்தினார்” எனக் குறிப்பிட்ட ஸ்டாலின், “ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் போன்றவற்றை 2006-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தடை செய்தபோது, பாதுகாப்பான முறையில் நாங்கள் நடத்துவோம் என்று உறுதி அளித்து, அனுமதியை பெற்றவர் கருணாநிதி” என்றார்.
“2007-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்தபோதும், தடையை நீக்குவதற்காக வலுவான வாதங்களை வைத்து வாதாடியதும் போட்டிகள் நடத்தலாம் என்று அனுமதியைப் பெற்றதும் திமுக ஆட்சியில்தான்.
அதன்பிறகு கடந்த ஆண்டு மே மாதம், ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தலாம் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றத்தில் பெற்றோம்” என்று கூறிய முதலமைச்சர், “இவ்வளவு தடைகளையும் உடைத்தால்தான் இன்றைக்கு ஏறு தழுவுதல் போட்டி கம்பீரமாக நடக்கிறது என்றார்.
கடைசியாக “சாதிப் பிளவுகளும் மத வேறுபாடுகளும் தமிழர் ஒன்றுமையை சிதைக்க பிற்காலத்தில் உருவாக்கப்பட்டவை என்பதை உணர்ந்து தமிழர் என்ற அடையாளத்தோடு இது போன்ற பண்பாட்டுத் திருவிழாக்களை ஒற்றுமையாக நடத்து வேண்டும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.