Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

ஜனவரி 9-ல் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு!

லக முதலீட்டாளர் மாநாட்டைத் தொடர்ந்து, ‘உலகத் தமிழர் பொருளாதார மாநாடு’ சென்னையில் நடைபெற உள்ளது. ஜனவரி 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில், லீ மெரிடியன் ஹோட்டலில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் 50 பேர் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க இருக்கின்றனர். உலக பொருளாதார சூழல், வாய்ப்புக்களும் சவால்களும், புத்தாக்கத் தொழில்கள், புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான தொழில்கள், நிதி மற்றும் முதலீட்டு உதவிகள், சுகாதாரம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் வாய்ப்புகள், தகவல் தொடர்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு, கல்வி மற்றும் தொழில் வாய்ப்பின் மூலம் பெண்கள் முன்னேற்றம்… எனப் பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன.

இந்த மாநாட்டை, சென்னை மேம்பாட்டு சொசைட்டி மற்றும் உலகத் தமிழ் பொருளாதார அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாட்டில், தமிழர்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்குப் பங்களித்த 12 தமிழ் ஆளுமைகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு உலகத் தமிழர்களின் தங்க மகுடம் விருது வழங்கப்பட உள்ளது.

இந்த மாநாட்டில், தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பங்களிப்பு குறித்த சிறப்பு அமர்வு ஒன்று நிகழ்கிறது. அந்த அமர்வை, உலகத் தமிழர்கள் பொருளாதார அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் வி.ஆர்.எஸ். சம்பத் ஒருங்கிணைக்கிறார்.

அமைச்சர் துரைமுருகன், கயானாவின் முன்னாள் தூதர் வி.மகாலிங்கம், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.என்.வள்ளிநாயகம், மொரீஷியஸ் நாட்டின் முன்னாள் அதிபர் டாக்டர் பரமசிவம் பிள்ளை வையாபுரி, கயானாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மோசஸ் வீராசாமி நாகமுத்து, டர்பன் முன்னாள் துணை மேயர் லோகி, மலேசிய முன்னாள் அமைச்சர் எம்.சரவணன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்க விரும்புவோர், கீழ்க்காணும் இணையதளத்திற்குச் சென்று தங்களின் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.
economic-conference.com

Exit mobile version