சொத்துப் பதிவு: முத்திரைத்தாள் வாங்கும்போது இதில் கவனம் தேவை!
வீடு, நிலம் வாங்கும்போது, வீடு கட்டுமான ஒப்பந்தம், குத்தகை பத்திரம், கிரயம், தானம் மற்றும் செட்டில்மென்ட் போன்றவற்றை பத்திரங்களில் பதிவு செய்ய, பணம் கட்டி முத்திரைத்தாள் வாங்குவது அவசியம். முத்திரைத்தாள் கட்டணம் மூலமாக அரசாங்கம், கருவூலத்துக்குத் தேவையான வரியைப் பெறுகிறது.
குறிப்பிட்ட வீடு அல்லது மனைக்கான உரிமையை சட்டப்பூர்வ ஆதாரமாக மாற்ற, ஒருவரது பெயருக்கு அந்த சொத்து, ஆவணமாகப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதன் மூலம் வீட்டு வரி ரசீது, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதிவேடுகளில் சம்பந்தப்பட்டவர் பெயருக்கு மாற்றி ஆவணப்படுத்திக் கொள்ள இயலும்.
முத்திரைத்தாள் கட்டணத்தை குறைக்கவோ, அதிகரிக்கவோ முடியாது என்பதுடன், அதன் விவரங்களை சரிபார்த்த பின்னரே சொத்துப் பதிவு செய்யப்படும்.
முத்திரைத்தாள் கட்டணம் பத்திரங்களுக்கு பத்திரம் வேறுபடக்கூடியது. பத்திரப்பதிவு செய்யும்போது முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவாளர் கட்டணம் என்று இரண்டு கட்டணமும் பத்திரம் பதிவு செய்பவர் கட்ட வேண்டும். இந்நிலையில், சார் – பதிவாளர்களுக்கு, பதிவுத்துறை தலைமை முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளார்.
அதன்படி, சொத்து பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் ஆவணங்களின் முத்திரைத்தாள், வெளிநபர் பெயரில் வாங்கப்பட்டு இருக்கக்கூடாது, முகவரின் பெயர், முகவரியையும் சரிபார்க்க வேண்டும் என்று பதிவுத்துதுறை உத்தரவிட்டிருக்கிறது.
‘முத்திரைத்தாள் வெளிநபர் பெயரில் கூடாது’
இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், “பதிவுக்கு வரும் ஆவணங்களில், சொத்து பரிமாற்றம் தொடர்பான விபரங்களை சரிபார்ப்பதில், கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. இத்துடன் முத்திரைத்தாள் தொடர்பான விஷயங்களிலும் சார் – பதிவாளர்கள் கவனம் செலுத்த வேண்டும். முத்திரைத்தாள் யார் பெயரில் வாங்கப்பட்டுள்ளது என்பதை கவனிக்க வேண்டும்.
சொத்தை எழுதி கொடுப்பவர் வாங்குபவரில் ஒருவர் பெயரில் மட்டுமே முத்திரைத்தாள் வாங்க வேண்டும். விற்பவர், வாங்குபவர் தவிர்த்து, வேறு பெயர்களில் வாங்கப்பட்ட முத்திரைத்தாளில் எழுதப்பட்ட பத்திரங்களைப் பதிவுக்கு ஏற்கக்கூடாது. முத்திரைத்தாளி, அதை விற்கும் முகவர் குறித்த விபரங்கள் முறையாக இடம்பெற வேண்டும். அவற்றில் திருத்தங்கள் இருக்கக் கூடாது.
எந்த தேதியில் முத்திரைத் தாள் வாங்கப்பட்டதோ, அதற்கு பிந்தைய நாளில் சொத்துப் பரிமாற்ற நிகழ்வுகள் குறிப்பிடப்பட வேண்டும். முத்திரைத்தாள் விற்கப்பட்ட தேதியில் இருந்து, ஓராண்டு வரையிலான காலத்துக்குள், அதில் எழுதப்பட்ட சொத்துப் பரிமாற்றத்தைப் பதிவு செய்யலாம்” என்று பதிவுத்துறை தெரிவித்துள்ளது.