செம்மஞ்சேரியில் அதிநவீன விளையாட்டு நகரம்… அடுத்த தலைமுறை சாம்பியன்களை உருவாக்கும் தமிழ்நாடு அரசு!

சென்னை செம்மஞ்சேரியில் அதிநவீன விளையாட்டு நகரத்தை தமிழ்நாடு அரசு உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதனால், விளையாட்டில் சாதிக்க விரும்பும் இளம் விளையாட்டு வீரர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியும் என்பதால், தமிழ்நாட்டிலிருந்து வருங்காலத்தில் பல சாம்பியன்கள் உருவாகுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்றதிலிருந்தே மாநிலத்தின் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் சென்னையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தியதன் மூலம், சர்வதேச அளவிலான கெளரவம் தமிழ்நாட்டுக்கு கிடைத்தது. போட்டி ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்ததற்காக விளையாட வந்த பிற நாட்டு வீரர்கள், பொதுமக்கள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் பாராட்டி இருந்தனர். பிரதமர் மோடியும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தி இருந்ததாக பாராட்டி இருந்தார்.

இந்த நிலையில், விளையாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து விளையாட்டுத் துறையில் மேலும் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. திறமை இருந்தும் பயிற்சிக்கான வசதி வாய்ப்புகள் இல்லாத இளம் விளையாட்டு வீரர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகள் தமிழ்நாடு அரசு தரப்பில் வழங்கப்படுகிறது.
செம்மஞ்சேரியில் அதிநவீன விளையாட்டு நகரம்
இத்தகைய நிலையில்தான், சென்னை செம்மஞ்சேரியில், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் உலகளாவிய அதிநவீன விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான ஆலோசகர் நிறுவனத்தை பணியமர்த்த, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் அதிநவீன விளையாட்டு நகரம் அமைப்பதற்கான மின்னணு மூலம் ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது.
திருச்சி, செங்கிப்பட்டி மற்றும் சென்னை ஆகிய இடங்கள் ஆலோசனையில் இருந்த நிலையில், இறுதியாக சென்னையில் OMR-இல் உள்ள செம்மஞ்சேரியில் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதிநவீன விளையாட்டு நகரம் அமைக்கப்பட்டால், அது விளையாட்டுகளின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிப்பதுடன், முன்னணி விளையாட்டுப் போட்டிகளின் முனையமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்மைகள் என்னென்ன?
விளையாட்டுகளில் பங்கேற்பது உடல் தகுதி, மன ஆரோக்கியம் மற்றும் கல்வித் திறனை மேம்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. குழுப்பணி, ஒழுக்கம் மற்றும் விடாமுயற்சி போன்ற மதிப்புமிக்க வாழ்க்கைத் திறன்களையும் விளையாட்டு கற்றுக்கொடுக்கிறது.
இந்த நிலையில், இந்த விளையாட்டு நகரம் அமைக்கப்பட்டால், அது இளம் விளையாட்டு வீரர்களுக்கு அவர்களின் திறன்களையும் திறமைகளையும் முழுமையாக வளர்த்துக் கொள்ள வாய்ப்பளிக்கும். மேலும், விளையாட்டின் மீதான அவர்களின் ஆர்வத்தைத் தொடரவும் அவர்களின் கனவுகளை அடையவும் அவர்களுக்கு வாய்ப்பளிக்கும்.
விளையாட்டு நகரம் என்பது தடகளம், சைக்கிள் ஓட்டுதல், ஹாக்கி, கூடைப்பந்து, கைப்பந்து, குத்துச்சண்டை உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக்களுக்கான அதிநவீன வசதிகளுடன் பரந்த அளவில் அமையப்பெறும். இது உலகத்தரம் வாய்ந்த பயிற்சி மற்றும் பயிற்சித் திட்டங்களுக்கான அணுகலை வழங்கும். அத்துடன் இளம் விளையாட்டு வீரர்கள், மிக உயர்தர நிலையில் இருக்கும் இதர போட்டியாளர்களுடன் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளையும், அனைத்து அம்சங்களிலும் வெற்றிபெறத் தேவையான திறன்களையும் குணங்களையும் வளர்த்துக் கொள்ள உதவும்.
தமிழ்நாடு அரசின் இந்த தொலை நோக்குத் திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டிலிருந்து அடுத்த தலைமுறை சாம்பியன்கள் உருவாகுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.