சென்னை வெள்ளத்தைத் தடுக்க ட்ரோன்கள்!
இந்த மழைக்காலத்தில் மட்டுமல்ல. எப்போது மழை பெய்தாலும் சென்னைக்கு பாதிப்பு வரக் கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு கண்ணும் கருத்துமாக இருக்கிறது.
2015 மழை வெள்ளத்தை சென்னை மக்கள் மறந்து விடவில்லை. இனி ஒருமுறை அப்படிப்பட்ட பாதிப்புகள் நிகழ்ந்து விடக் கூடாது என்பதற்காக புயல் வேகத்தில் பணிகளை முடுக்கி விட்டிருக்கிறது பெருநகர சென்னை மாநகராட்சி .
எவ்வளவு மழை பெய்தாலும் சாலைகளில் குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் வடிந்து செல்வதற்கு, மழை நீர் வடிகால் பணிகள் மிகத் தீவிரமாக நடந்தன. பணிகள் முடிவடைந்த பகுதிகள், இந்த மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காமல் தப்பித்துள்ளன.
இந்த நிலையில், முழுமையாக தண்ணீர் வடிந்து செல்வதற்கும், அதற்கு ஏதேனும் தடங்கல் இருக்கிறதா எனப் பார்ப்பதற்கும் பெருநகர சென்னை மாநகராட்சி ட்ரோன்களைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
நீரின் போக்கு, தடங்கல் போன்றவற்றை அறியும் ட்ரோன்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கின்றன. 2026 ஆம் ஆண்டு வரையில் அவை பணியாற்ற இருக்கின்றன.
“ இந்த ட்ரோன்களின் மூலம் தண்ணீர் செல்லும் பாதை எங்கெங்கு துண்டிக்கப்பட்டுள்ளது, எங்கெல்லாம் அடைப்பு இருக்கிறது, எங்கே தண்ணீர் ஒழுங்காகப் போகவில்லை, ஆறுகள் எந்த அளவுக்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன போன்ற விபரங்களைத் தெரிந்து கொள்ளலாம்” என்கிறார் சென்னை பெருநகர கமிஷனர் டாக்டர் ஜே.ராதாகிருஷ்ணன்.
சென்னை பேரிடர் மேலாண்மை திட்டம் 2023ன் கீழ் அடையாறு, கொசஸ்தலையாறு, கூவம் ஆகிய ஆற்றுப்பகுதிகளில் ட்ரோன்கள் ஆய்வு செய்ய இருக்கின்றன.
ட்ரோன்கள் இந்த ஆற்றுப் பகுதிகளின் மேலே பறந்து எடுத்துத் தரும் புகைப்படங்களை வைத்து, பொதுப்பணித்துறை பொறியாளர்கள் ஆய்வு செய்வார்கள். அந்த ஆய்வின் அடிப்படையில் நீண்ட கால வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளைத் திட்டமிடுவார்கள்.
இந்தத் திட்டத்திற்கு ஏழு கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிட்டிருக்கிறார்கள். இந்த ட்ரோன்கள் தரும் வீடியோக்கள் மற்றும் 3D மாடல்கள், சுமார் 10 வருடங்கள் வரையில் உதவியாக இருக்கும் என்கிறார்கள்.