சென்னை வரும் பெண் காவலர்களுக்கு 100 ரூபாயில் தங்கும் விடுதி திறப்பு!
வெளிமாவட்டங்களிலிருந்து இருந்து பணி நிமித்தமாக சென்னை வரும் பெண் காவலர்கள், இனி வெறும் 100 ரூபாய் கட்டணத்திலேயே தங்கிச் செல்வதற்கான விடுதி திறக்கப்பட்டுள்ளது.
சென்னை, பூக்கடை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஐசக் தெருவில், பெண் காவலர்கள் தங்குவதற்காக ஓய்வு அறைகளுடன் கூடிய கட்டடம் கட்டப்பட்டிருந்தது. இந்த கட்டடம் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், இது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த விடுதி கட்டடம் புதுப்பிக்கப்பட்டது. அந்த விடுதியை, போலீஸ் கமிஷனர் திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும், காவலர் ஓய்வு இல்ல வளாகத்தில் மரக்கன்றையும் நட்டார்.
இந்த நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் வடக்கு கூடுதல் ஆணையாளர் அஸ்ராகர்க் உள்ளிட்ட பல்வேறு காவல் உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர். இந்த பெண் காவலர் ஓய்வு இல்லத்தில், மொத்தம் 21 அறைகள் மற்றும் 15 படுக்கைகள் கொண்ட ஒரு பொது அறையும் உள்ளது. ஒய்வு இல்லத்தின் உள்ளே மற்றும் வெளியே செல்லும் வழிகள் மற்றும் நடைபாதையில் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு அறையில் இருவர் வீதம் 42 பெண் காவலர்களும் , பெரிய பொது அறையில் 15 பெண் காவலர்களும் தங்கலாம்.
உள்ளூர் பெண் காவலர்கள் மட்டுமல்லாது, வழக்குகள் தொடர்பாக சென்னை நீதிமன்றங்களுக்கோ அல்லது காவல்துறை அலுவலகங்களுக்கோ வெளியூர்களில் இருந்து சென்னை வரும் காவலர்களும் இந்த விடுதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணம் நாள் ஒன்றுக்கு வெறும் 100 ரூபாய் மட்டுமே. அதுமட்டுமல்லாது சென்னை, பூக்கடை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிக்குள்ளேயே இருப்பதால், விடுதிக்காக தேடி அலையும் சிரமமும் குறையும். வெளியூர் பெண் காவலர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால், இது அவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.