10 கோடி பயணிகளைக் கையாளப்போகும் பரந்தூர் விமான நிலையம்!
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக 2030 ஆம் ஆண்டுக்குள் உயர்த்த இலக்கு நிர்ணயித்து, அதனை செயல்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
அந்த வகையில், தலைநகர் சென்னையில் 2 ஆவது விமான நிலையம் அவசியம் என வலியுறுத்தப்பட்டு வந்தது. சென்னை, மீனம்பாக்கத்தில் 5,368.93 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள தற்போதைய விமான நிலையத்தில், விமானங்களின் எண்ணிக்கையும் பயணிகளின் எண்ணிக்கையும் நிரம்பி வழிகிறது. மேலும், சரக்கு கையாளும் திறனும் படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் காரணமாகவே, பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது.
5,746 ஏக்கர்… ரூ. 32,704 கோடி செலவு
அதன்படி, சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம், காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூரில் சுற்றிலும் உள்ள 5746.18 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ.20,000 கோடி முதலீட்டில் அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்காக தேவைப்படும் நிலத்திற்காக, தனியார் பட்டா நிலம் 3774.01 ஏக்கர் மற்றும் அரசு நிலம் 1972.17 ஏக்கர் கையகப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தனியாரிடம் இருந்து கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு ஏற்கெனவே அரசால் அறிவிக்கப்பட்ட வழிகாட்டுதல் படி, ரூ.1822.45 கோடி இழப்பீடு கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், நிலம் எடுப்புக்காக சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்கள், சிறப்பு துணை ஆட்சியர்கள், சிறப்பு தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் உட்பட 326 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மூன்று முனையங்களுடன், பரந்தூரில் அமைக்கப்பட இருக்கும் பரந்தூர் விமான நிலையம், சுமார் 10 கோடி பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக கட்டப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் கட்டுவதற்கான மொத்தச் செலவு 32,704.92 கோடி ரூபாயாகவும், இதில் பயணிகள் முனையங்களைக் கட்ட 10,307.3 கோடி ரூபாய் செலவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 ல் தொடங்கும் கட்டுமான பணி
இந்த விமான நிலையத்திற்கான முதல் கட்ட கட்டுமான பணி, 2026 ஆம் ஆண்டு ஜனவரி தொடங்கி 2028 டிசம்பரில் முடிவடையும் என்றும், இதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த கட்டங்களாக பணிகள் தொடங்கப்பட்டு, 2046 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் அனைத்து பணிகளும் முடிவடையும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமான நிலையமானது மூன்று முனையங்களைக் கொண்டிருக்கும் – முனையம் 1 (3,45,758 சதுர மீட்டர்), முனையம் 2 (4,76,915 சதுர மீட்டர்) மற்றும் முனையம் 3 (5,05,495 சதுர மீட்டர்). சரக்கு முனையமும், சரக்கு கையாளும் பகுதியும் சேர்ந்து 2,30,500 ச.மீட்ட அளவில் இருக்கும். மேலும், பரந்தூர் விமான நிலையத்தில் 4040X45 மீட்டர் அளவுக்கு இரண்டு இணையான ஓடுபாதைகள் இருக்கும்.
இந்த இடத்தை பெங்களூரு-சென்னை விரைவுச் சாலையுடன் இணைக்கும் வகையில் இணைப்புச் சாலைகள் அமைக்கப்பட உள்ளன. திட்டத்தின் ஒரு பகுதியாக, விமான நிலையத்திற்கும் தற்போதுள்ள பெங்களூரு-சென்னை NH-48 க்கும் இடையில் தடையற்ற இணைப்பை ஏற்படுத்த, தமிழ்நாடு அரசு புதிய 6-வழி விமான நிலைய இணைப்புச் சாலையை உருவாக்க உள்ளது.
மெட்ரோ ரயில் நிலையம்
பரந்தூர் விமான நிலையத்திற்கு சென்னை – பெங்களூரு நெஞ்சாலை வழியாக, நாம் செல்ல முடியும். பல தளங்கள் கொண்ட கார் பார்க்கிங் வசதி இங்கே அமைக்கப்படும். விமான நிலையத்திற்கு முன்னால் மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ளது. அருகில் உள்ள 2 நெடுஞ்சாலைகளில் இருந்து வரும் இணைக்கும் சாலைகள், விமானநிலையத்திற்கு முன்பாக வந்து முடியும். இதனால் வாகனங்களில் வரும் பயணிகள் இங்கே இறங்க முடியும்.
மெட்ரோவில் வரும் பயணிகள், விமானநிலையத்தின் முன்புறத்தில் சென்று சேர்வார்கள். விமானநிலையத்தின் ஒரு புறத்தில் பயணிகளின் முனையமும் மறு புறத்தில் கார்கோ முனையமும் இருப்பதால், நெரிசல் ஏற்படாது.