சென்னை சுற்றுலா பொருட்காட்சியில் என்ன ஸ்பெஷல்?

சென்னை தீவுத் திடல், அறிஞர் அண்ணா கலையரங்கில், 48 வது இந்திய சுற்றுலா மற்றும் பொருட்காட்சியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்தப் பொருட்காட்சியில் “சுற்றுலா மற்றும் பசுமை முதலீடுகள்” என்ற கருப்பொருளை மையமாக கொண்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, நான் முதல்வன் திட்டம், காவல்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 49 அரங்கங்கள் மற்றும் ஒன்றிய அரசின் 2 அரங்கங்கள் என மொத்தம் 51 அரங்கங்கள் இடம் பெற்றுள்ளன. பொருட்காட்சிக்கு வருகை தரும் பொது மக்கள் வசதிக்காக, சென்னை நகரின் முக்கிய பகுதிகளிலிருந்து கூடுதலாக அரசுப் பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொருட்காட்சியின் சிறப்பம்சங்கள்
இந்து சமய அறநிலையத்துறை அரங்கில், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களின் பிரசாதங்கள் கிடைக்கும்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரங்கில், முழு உடல் பரிசோதனை, இரத்தப் பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனை, இதய வரைவலை பரிசோதனைகள் செய்து கொள்ளலாம். மருத்துவ ஆலோசனையும் வழங்குகிறார்கள்.
ரிசர்வ் வங்கி அரங்கில், பழைய கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றி புதிய ரூபாய் நோட்டுகள் பெற்றுக் கொள்ளலாம்.
பொருட்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தனியார் கடைகள் மற்றும் அரங்கங்கள் மூலம் நேரடியாக சுமார் 5,000 பேரும், மறைமுகமாக சுமார் 30,000 பேரும் வேவைவாய்ப்புப் பெற்றுள்ளனர்.
80,000 சதுர அடி பரப்பளவில் பொழுதுபோக்கு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 12 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கண்டுகளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.