சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகள் எங்கே? எப்போது?

பொங்கல் திருவிழாவையொட்டி, தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலைகளை வெளிப்படுத்தும் விதத்தில் ‘சென்னை சங்கமம்’ கலை விழா, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, தமிழ் மையம் அமைப்பின் நிறுவனர் பாதிரியார் ஜெகத்கஸ்பர் ஆகியோரின் முன்முயற்சியில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி, கடந்த 2007 ஆம் ஆண்டு தொடங்கியது. தமிழ்நாடு அரசின் ஆதரவோடு நடைபெறும் இந்த விழாவில், தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இந்த ஆண்டு சென்னை சங்கமம் கலை விழா இன்று தொடங்கி 17 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. அம்பத்தூர், எழும்பூர் அருங்காட்சியகம், பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா, கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானம், தீவுத்திடல், ராயபுரம் ராபின்சன் பூங்கா, கே.கே. நகர் சிவன் பூங்கா,
வளசரவாக்கம் லேமேக் பள்ளி மைதானம், கோயம்பேடு ஜெய்நகர் பூங்கா, அண்ணாநகர் கோபுர பூங்கா, நுங்கம்பாக்கம் மாநகராட்சி விளையாட்டுத் திடல், செம்மொழிப் பூங்கா, தி.நகர் நடேசன் பூங்கா எதிரில், சைதாப்பேட்டை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம்,
பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா, திருவல்லிக்கேணி பாரத சாரணர் அரங்கம் ஆகிய இடங்களில் தினமும் மாலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரையில் கரகாட்டம், நையாண்டி மேளம், தமிழிசை தெம்மாங்குப் பாட்டு, கிராமியப்பாட்டு, தப்பாட்டம், புரவியாட்டம், ஜிக்காட்டம், கோல்கால் ஆட்டம் சிலம்பாட்டம், வில்லிசை, வள்ளிக்கும்மி, நாடகம் எனப் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.