புதிய கேமரா தொழில்நுட்பம், டேட்டாபேஸ்… வாகன திருட்டைத் தடுக்க காவல்துறையின் புதிய ‘டெக்னாலஜி’!
அதிகரித்து வரும் வாகன திருட்டுகளைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கத்தில், வாகனங்களின் உரிமையாளர் யார் என்பதை உடனடியாக சரிபார்க்கும் புதிய கேமரா தொழில்நுட்பத்தை காவல்துறை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. குறிப்பாக இரு சக்கர வாகனங்கள் திருடு போவது அதிகரிப்பதால், அதை தடுக்கும் வகையில், தமிழக காவல்துறை இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
மொபைல் கேமரா டெக்னாலஜி
‘பாதுகாப்பான நகரத் திட்டத்தின்’ முக்கிய அங்கமாக இந்த செயல்திட்டம் முதலாவதாக சென்னை மாநகரில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக சென்னை நகரம் முழுவதும் 165 கோடி ரூபாய் செலவில், 5,250 சிறிய கையடக்க மொபைல் கேமராக்கள் வாங்கப்பட்டுள்ளன.
இந்த கேமராக்களால், வாகனங்களின் நம்பர் பிளேட்களை, தானாகவே ஸ்கேன் செய்து. வாகனப் பதிவு எண்ணைக் கண்டறிய முடியும். இதற்காக சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை மாநகர காவல்துறை தலைமையகத்தில் உள்ள கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்துடன் இணைந்த தரவுத்தளம் ( database) ஒன்று அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த தரவுத்தளத்தில் திருடப்பட்ட வாகனங்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் விரிவான விவரங்கள் உள்ளன.
அலெர்ட் மெசேஜ்
அவ்வாறு ஸ்கேன் செய்யப்படும்போது அந்த வாகனப் பதிவு எண்ணுடன், திருடப்பட்ட வாகனப் பதிவு எண் ஒத்துப்போனால், நகரம் முழுவதும் உள்ள அதிகாரிகளுக்கு இந்த தொழில்நுட்ப அமைப்பு எச்சரிக்கை தகவல்களை ( Alert Message) அனுப்பும் என்கிறார் பழைய வண்ணாரப்பேட்டை உதவி போலீஸ் கமிஷனர் சதாசிவம். முதலில் சோதனை அடிப்படையில், சென்னை நகருக்குள் இரு சக்கர வாகனங்கள் அதிகம் திருடு போகும் பகுதிகளில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம், எதிர்காலத்தில் மேலும் பல இடங்களுக்கு விரிவுப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவிக்கிறார்.
வாகனம் திருடப்பட்டது என்ற எச்சரிக்கை உறுதிசெய்யப்பட்டவுடன், களத்தில் இருக்கும் அதிகாரிகளின் கைகளில் இருக்கும் இந்த கையடக்க கேமராக்களால், சம்பந்தப்பட்ட வாகனத்தை ஓட்டி வந்தவரின் புகைப்படம் எடுக்கப்பட்டு, அது காவல்துறையின் முக அடையாள அங்கீகார அமைப்புக்கு அனுப்பப்பட்டு, உண்மை நிலை கண்டறியப்படும். இது குறித்த தகவல், மாநில குற்றப் பதிவு துறையால் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட்டு, தினசரி கண்காணிக்கப்படும்.
போதை கடத்தல் குழுக்களையும் கண்காணிக்கலாம்
இதன்மூலம் சந்தேக நபர்களை, குறிப்பாக போதைப்பொருள் கடத்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் குழுக்கள் போன்ற தொடர் குற்றச் செயல்களில் தொடர்புடையவர்களை அடையாளம் காணுவும் கண்காணிக்கவும் முடியும்.
இந்த புதிய கேமராக்கள், ஏற்கனவே உள்ள தானியங்கி நம்பர் பிளேட் அங்கீகார கேமராக்களுடன் (ANPR)இணைந்து, போக்குவரத்து விதிமீறல்களைப் பதிவு செய்வதில் கூடுதலாக உதவும். கடுமையான கண்காணிப்பு மற்றும் அதிக அபராதம் விதிப்பது, குறிப்பிடத்தக்க வகையில் சாலை விபத்துகளைக் குறைத்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.