பெருங்குடியில் குப்பைக் கிடங்கிற்கு என்று 225 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில் 93 ஏக்கர் பரப்பை தனியாகப் பிரித்து அதில், 185 கோடி ரூபாய் மதிப்பில் ‘உயிர் பன்முகப் பூங்கா’ ஒன்றை அமைக்க சென்னை பெருநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இந்தப் பூங்காவில் பறவைகளைப் பார்வையிடும் கோபுரம், கழிப்பிட வசதி, நடைப் பயிற்சிக்கான வசதிகள், குளங்கள் எனப் பல்வேறு அம்சங்கள் இடம் பெறுகின்றன. இந்தப் பூங்காவில் 6 குளங்கள் இடம் பெறும் எனவும், 18 லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளவு கொண்டதாக அவை அமையும் எனவும் பெருநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பூங்காவில் சுற்றுச் சூழல் மற்றும் பசுமையைப் பாதுகாக்க சதுப்பு நிலங்கள், மரங்கள், செடிகள், புதர்கள் இடம் பெறும். ஆற்றங்கரையோரக் காடுகள், இலையுதிர்க்காடுகள் மற்றும் நிழல் காடுகள் போன்ற காடுகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பூங்காவில் மொத்தமுள்ள 93 ஏக்கர் பரப்பில், 58.15 ஏக்கர் பரப்பு அதாவது 62.4 சதவீதப் பகுதி பசுமை மண்டலமாகவும் 23.8 ஏக்கர் பரப்பு (25.5%) நீர் மண்டலமாகவும் அமையும். கட்டங்கள், சாலைகள் போன்ற கட்டமைப்புகள் 11.2 ஏக்கர் பரப்பளவில் அமையும். நடைப் பயிற்சிக்கு வட்ட வடிவமான நடை பாதை 1.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட உள்ளது.
சென்னை அருகே இப்படி ஒரு இயற்கை எழில் கொஞ்சும் பூங்கா அமைக்கப்படுவது, சென்னை வாசிகளுக்கு ஒரு இயற்கையான ஆரோக்கியமான பொழுது போக்கு மையமாக அமைவதோடு, சுற்றுச் சூழலையும் பாதுகாக்கும்.