சூழ்ந்த வெள்ளம்… ஒற்றை பல்பு… அரசு பிரசவ வார்டில் நடந்த ‘நண்பன்’ படத்தின் நிஜ நிகழ்வு!

ங்கர் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’ படத்தில் மழைவெள்ளம் சூழ்ந்த நெருக்கடியான சூழலில், மின்சாரமும் இல்லாமல் பிரசவ வலியில் துடிக்கும் ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு விஜய் உதவுவதைப் போன்று நடக்கும் திகிலான, நெகிழ்ச்சியான ஒரு பிரசவ காட்சியைப் போன்றே, தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அரசு மருத்துவமனை ஒன்றில் நடந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள பட்டாண்டிவிளையைச் சேர்ந்தவர் ஜோன்ஸ். இவரது மனைவி ரம்யா. 24 வயதாகும் ரம்யா, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார்.

‘நண்பன்’ பட காட்சி

நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு, கடந்த 18-ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. அன்றைய தினமும் அதற்கு முந்தைய தினமும் தான் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களைப் புரட்டிப்போட்ட கன மழை பெய்தது. இதனால் வீட்டைச் சுற்றி வெள்ள நீர் சூழ்ந்திருந்ததால், உறவினர்கள் செய்வதறியாது திகைத்தனர். இருப்பினும் எப்படியோ சரக்கு கொண்டு செல்லும் ஆட்டோ ஒன்றை வரவழைத்தனர். அதில் பிரசவ வலியால் துடித்த ரம்யாவை ஏற்றிக்கொண்டு, தாயார் பாத்திமா, அவரது தம்பி ஜேசுபால் மற்றும் உறவினர்கள் ஏரல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வழியில் சூழை வாய்க்கால் சாலையில் வெள்ளம் அதிகமாக சென்றதால், மேற்கொண்டு ஆட்டோவில் செல்ல முடியவில்லை . இதனால் ஜேசுபால், ரம்யாவை தோளில் தூக்கிக் கொண்டு, குடும்பத்தினருடன் தண்ணீரைக் கடந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சென்றால் மருத்துவர்கள் சென்றுவிட்டனர். நர்ஸ் ஜெயலட்சுமி மட்டுமே இருந்துள்ளார். இதனால் குடும்பத்தினர் பரிதவித்தனர்.

இந்த நிலையில், மாலை 6 மணி அளவில் மழை வெள்ளம் மருத்துவமனைக்கு உள்ளே வர ஆரம்பித்தது. அந்த நேரம், ரம்யாவுக்கு பிரசவ வலி அதிகமானதால், நர்ஸ் ஜெயலட்சுமி, பிரசவத்திற்கு தேவையான முக்கியமான மருத்துவ பொருட்களை எடுத்துக் கொண்டு ரம்யாவை பிரசவ வார்டுக்குக் கொண்டு சென்றார்.

மழை வெள்ளம் முட்டளவுக்கு வந்து கொண்டு இருந்தபோது, ரம்யாவுக்கு, ஜெயலட்சுமி பிரசவம் பார்க்கத் தொடங்கினார். அப்போது மின்சாரமும் இல்லை. இருப்பினும் இன்வெர்ட்டர் உதவியுடன் ஒரே ஒரு பல்பு மட்டுமே எரிந்துகொண்டிருந்தது. அந்த குறைந்த வெளிச்சத்திலேயே தைரியமாக ஜெயலட்சுமி பிரசவம் பார்த்த நிலையில், இரவு 7 மணி அளவில் ரம்யாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனால், உறவினர்கள் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.

ரம்யாவும் குழந்தையும் தொடர்ந்து மருத்துவமனையில் வைத்து நன்கு கவனிக்கப்பட்ட நிலையில், வெள்ளம் குறைந்த 3 நாட்களுக்குப் பிறகு ரம்யாவும், குழந்தையும், அவரது குடும்பத்தினரும் படகு மூலமும், பின்னர் காவல்துறை வாகனம் மூலமும் அவரது ஊரில் கொண்டு விடப்பட்டனர். தற்போது தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர்.

இதுகுறித்து ரம்யாவின் தாயார் பாத்திமா கூறுகையில், “எங்களுக்கு நர்ஸ் ஜெயலட்சுமிதான் தெய்வம். நாங்கள் எப்படி தப்பிப்போம். குழந்தையை எப்படி காப்பாற்றுவோம் என நினைத்தோம். ஆனால் கடவுள் அருளால் ஜெயலட்சுமி எங்களுக்கு உதவி செய்தார்” என்றார். “நர்ஸ் ஜெயலட்சுமி கூறுகையில், ‘ரம்யா மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வரும்போது தண்ணீர் இல்லை . பிறகு கொஞ்சம், கொஞ்சமாக வெள்ளம் வந்தபோது, எனக்கு பயமாகதான் இருந்தது. இருப்பினும் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, இன்வெர்ட்டர் பல்பு உதவியுடன் பிரசவம் பார்த்தேன். நல்லபடியாக நடந்தது. குழந்தையும், தாயும் தற்போது நலமாக இருப்பதால் மகிழ்ச்சி அடைந்தேன்”

ரம்யா, நர்ஸ் ஜெயலட்சுமி

இந்த மழைவெள்ளத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் வேறு சில கர்ப்பிணி பெண்களும் இவ்வாறு நெருக்கடியான நிலையில் மீட்கப்பட்டு காப்பாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஜெயலட்சுமிகள்’ இருக்கும் வரை மனிதம் மரித்துப்போகாது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lcc instruksikan opd dan deputi bp batam gerak cepat atasi persoalan banjir. Alex rodriguez, jennifer lopez confirm split. To change your app recommendation settings to enhance your experience.