சிறுபான்மையினர் பள்ளிகளிலும் ‘புதுமைப்பெண்’ திட்டம்: பட்ஜெட்டில் வரப்போகும் அறிவிப்புகள்!
வரவிருக்கும் 2024-25 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டில், அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தில் சேர்க்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. இது தவிர, சிறுபான்மையினர் நலன் சார்ந்த மேலும் பல்வேறு அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம்பெற இருப்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவியர், பொருளாதார சிக்கல்களின் காரணமாக 12 ஆம் வகுப்பு முடிந்தவுடன் கல்வியை தொடர முடியாமல் போகிறது. எனவே, இந்த மாணவிகளின் கல்வி தடைபடாமல், அவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி “புதுமைப் பெண் திட்டம்” கடந்த 05.09.2022 அன்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ், 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து, கல்லூரி, டிப்ளமோ என மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.
சிறுபான்மையினர் பள்ளிகளிலும் ‘புதுமைப்பெண்’ திட்டம்
பாலின சமத்துவம், குழந்தைகள் திருமணம் குறைத்தல், பெண்கள் அதிகாரம், கல்வி இடை நிற்றல் போன்ற பல பிரச்னைகளைத் தாண்டி, பெண்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் இத்திட்டத்தினை முதலமைச்சர் கொண்டு வந்தார். கடந்த 5 ஆண்டுகளில் பள்ளிப் படிப்பை முடித்து உயர்கல்வியை தொடர முடியாமல் கைவிட்ட ஆயிரக்கணக்கான மாணவிகள், இந்த திட்டத்தின் வாயிலாகத் தங்களது உயர்கல்வியை தொடர்கின்றனர். ‘புதுமைப்பெண்’ திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 3.5 லட்சத்துக்கும் அதிகமான மாணவிகள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர்.
இந்த நிலையில், பெண்கள் முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் இந்த ‘புதுமைப்பெண்’ திட்டத்தை அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளிலும் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனைக் கூட்ட நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின், சிறுபான்மையினர் நலன் சார்ந்து அறிவிக்கப்பட இருக்கிற பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
சிறுபான்மையினர் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்
அதில் முக்கியமாக, “அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் சேர்த்தல் குறித்து நிதி நிலை அறிக்கையில் நல்ல செய்தி வெளிவரும். கிராமப்புறங்களில் உள்ள அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் முதலமைச்சரின் காலைச் சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் குறித்து, வரும் நிதி நிலை அறிக்கையில் சாதகமாக பரிசீலிக்கப்படும்” என்பது உள்ளிட்ட மேலும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
மேலும் முக்கியமான அறிவிப்புகள்
கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ் பெறுவதற்கு இணைய வழியில் விண்ணப்பித்து சான்றிதழ் பெற்றுக் கொள்வதற்கான Web Portal, இந்த மாதத்திற்குள் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும்.
இல்லங்கள் மற்றும் விடுதிகளுக்கான உரிமம் பதிவு மற்றும் புதுப்பித்தல் குறித்து தேவையான அனைத்துச் சான்றிதழ் மற்றும் அனைத்து ஆவணங்கள் வழங்கப்பட்டவுடன் குறுகிய காலத்திற்குள் உரிமம் வழங்கப்படும்.
அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் (Hi-Tech Labs), வானவில் மன்றம், தேன் சிட்டு மலர், கலைத்திருவிழா போன்ற திட்டங்கள் படிப்படியாக செயல்படுத்துவது குறித்து சாதகமாகப் பரிசீலிக்கப்படும்.
அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணியாளர் நிர்ணயம், பணி நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்தல், பணியிட மாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகள் குறித்த கோரிக்கைகளுக்கென தனியாக ஒரு இணையதள வசதி ஏற்படுத்தப்படும்.சிறுபான்மையினரின் கல்லூரி ஆசிரியர் பணியிடங்களில், யு.ஜி.சி. மற்றும் அரசு விதிகளுக்குட்பட்டு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு, பல்கலைக்கழகம் மற்றும் அரசால் மூன்று மாத காலத்திற்குள் நியமன அங்கீகாரம் அளிக்கப்படும்.
மாநில அரசால் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மதசார்பு சிறுபான்மையினர் (Religious Minority) அந்தஸ்து சான்றிதழ் தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இனிவருங்காலங்களில் இச்சான்றிதழ் காலம் குறிப்பிடப்படாமல் நிரந்தர சான்றிதழாக வழங்கப்படும் என்பது உள்ளிட்ட மேலும் பல அறிவிப்புகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார் .