Amazing Tamilnadu – Tamil News Updates

சிகரத்தில் தமிழ்நாடு: முதலமைச்சர் பெருமிதம்!

புத்தாக்கத் தொழில் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றுள்ளது. இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளப் பதிவில், “ஸ்டார்ட் அப் தரவரிசைப் பட்டியலில், கடந்த ஆட்சிக் காலத்தில் 2018-இல் கடைசித் தரநிலையில் இருந்த தமிழ்நாடு, நமது திராவிட மாடல் ஆட்சியில் 2022-ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் முதலிடத்தை அடைந்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“டான்சீட் புத்தொழில் ஆதார நிதி, பட்டியலினத்தவர் பட்டியலினத்தவர்/பழங்குடியினர் தொழில் நிதியம், லாஞ்ச் பேடு நிகழ்வுகள் என ஒட்டுமொத்தமாக அரசு முன்னெடுத்த முயற்சிகளாலேயே தமிழ்நாடு இன்று சிகரத்தில் அமர்ந்துள்ளது” எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தற்போது 7600 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளதைக் குறிப்பிட்டுள்ள அவர், “அதில் 2022-ஆம் ஆண்டில் மட்டும் 2250 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதே தமிழ்நாடு அரசு நிகழ்த்திய பாய்ச்சலுக்குச் சான்று” என்று கூறியுள்ளார்.

இந்த சாதனைக்காக அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளதோடு, இந்த இடத்தைத் தக்கவைக்கவும் மேலும் உயரங்களைத் தொடவும் உழைக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Exit mobile version