சர்வதேச புத்தகக் கண்காட்சியில் 700க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்து!
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், சர்வதேச புத்தகக் கண்காட்சி 16 ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது. இந்தப் புத்தகக் கண்காட்சியில் 40 நாடுகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள் பங்கேற்றனர்.
தமிழ் மொழியில் இருந்து பிற மொழிக்கு மொழிப் பெயர்க்க, தமிழ்நாடு அரசு ஊக்கத் தொகை அறிவித்திருந்தது. அந்தத் திட்டத்தின் கீழ், 52 தமிழ்ப் புத்தகங்களை, 15க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்க ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
மலாய் மொழியில் 14 புத்தகங்களும், மலையாள மொழியில் ஒன்பது புத்தகங்களும், அரபி மொழியில் 6 புத்தகங்களும், கொரிய மொழியில் நான்கு புத்தகங்களும், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் தலா இரண்டு புத்தகங்களும், இத்தாலி, மராத்தி, ஆர்மீனியன், குஜராத்தி மற்றும் சீன மொழிகளில் தலா ஒரு புத்தகமும் மொழி பெயர்க்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச புத்தகக் கண்காட்சியில், தமிழ்ப் பதிப்பகங்கள் மற்றும் பிற நாடுகள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த பதிப்பகங்களுக்கு இடையே மொழி பெயர்ப்பு உரிமை பெற, 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
இந்த ஆண்டு, கண்காட்சி தொடங்கிய முதல் நாளில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. மூன்றாவது நாள் கண்காட்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “எழுத்தையும் வாசிப்பையும் கொண்டாடக் கூடிய இனம் தமிழினம்” என்று கூறினார். மேலும், கடந்த ஆண்டு சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில், பிற மொழிப் பதிப்பகங்கள் மற்றும் தமிழ்நாட்டுப் பதிப்பகங்களுக்கு இடையே, மொழி பெயர்ப்பு உரிமை பரிமாற்றம் தொடர்பாக 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின என்றும், இந்த ஆண்டு அது இரு மடங்காக 752 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின என்றும் தெரிவித்தார்.