சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேசப் புத்தகக் கண்காட்சியை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
இந்தக் கண்காட்சி செவ்வாய் கிழமை தொடங்கி மூன்று நாள் நடைபெறுகிறது.
இந்தக் கண்காட்சியை ஒட்டி 52 தமிழ்ப் புத்தகங்களை 15 பிற மொழிகளில் மொழி பெயர்க்க மொழிபெயர்ப்பு மானியம் வழங்கப்பட்டிருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கூறினார்.
தமிழில் இருந்து பிற மொழிகளுக்கு புத்தகங்களை மொழி பெயர்த்துக் கொண்டு செல்லவும், பிற மொழிப் புத்தகங்களை தமிழுக்குக் கொண்டு வரவும், பதிப்பாளர்களுக்கு இடையே ஒப்பந்தம் செய்து கொள்ள ஏதுவாக 50 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா, மலேசியா உட்பட 39 நாடுகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள் மற்றும் இலக்கிய முகவர்கள் இந்தப் புத்தக் கண்காட்சியில் பங்கேற்றுள்ளனர். தமிழ் தவிர்த்து பிற இந்திய மொழிப் பதிப்பாளர்கள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள் என மொத்தம் 400 பதிப்பாளர்கள் இந்தக் கண்காட்சியில் தங்களின் புத்தகங்களை வைத்துள்ளனர்.
லித்துவேனியாவைச் சேர்ந்த ‘புக் ஸ்மக்லர்ஸ் ஏஜென்சி’ தான் பதிப்பித்த 100 புத்தகங்களோடு இந்தக் கண்காட்சியில் பங்கேற்றிருக்கிறது. அந்தப் பதிப்பகத்தின் முகவர் பெனஸ் பெரன்ட்ஸ், மாரியஸ் மார்சின்கெவிசியஸ் என்ற எழுத்தாளர் எழுதிய பிபெல் என்ற குழந்தைகளுக்கான புத்தகம் தங்களின் பதிப்பக வெளியீடு என்றார். அந்தப் புத்தகம் “இரண்டாவது உலகப் போரின் போது, யூதர்கள் கொன்றழிக்கப்பட்ட போது, ஏற்பட்ட ஒரு நட்பைப் பற்றிப் பேசுகிறது” என்று அவர் கூறினார். இந்தப் புத்தகம் 11 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் நிர்வாக இயக்குனர் கஜலட்சுமி, வியாழனன்று மருத்துவ பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட 200 புதிய புத்தகங்கள் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
“எழுத்தாளர்களின் ராயல்டி, பதிப்பகங்களுக்கு இடையே பரஸ்பர ஒப்பந்தங்கள், உரிமை மாற்றம் என்று சர்வதேச புத்தக வர்த்தகத்திற்கான அனைத்து விஷயங்களிலும் இந்த சர்வதேச புத்தகக் கண்காட்சியால் பதிப்பாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது” என பொது நூலக இயக்குனர் இளம்பகவத் கூறினார்.
மொத்தில் இந்தப் புத்தகக் கண்காட்சி, உலகின் வெவ்வேறு பகுதிகளில் நிலவும் இலக்கியம், பண்பாடு, வாழ்க்கை முறை, வரலாறு போன்ற விஷயங்களை தமிழர்களும், தமிழர்களின் பண்பாடு, இலக்கியம், வாழ்க்கை முறை, வரலாறு போன்றவற்றை உலகச் சமூகமும் புத்தகங்கள் வாயிலாக அறிந்து கொள்ள நிச்சயம் உதவும். அதற்காகவே தமிழ்நாடு அரசுக்கு நாம் ஒரு சபாஷ் போடலாம்.