சரத்குமாரை பாஜக-வை நோக்கித் தள்ள வைத்தது எது?
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனராக இருந்த சரத்குமார், தனது கட்சியை பாஜக-வில் இணைத்து, தன்னையும் அக்கட்சியில் சேர்த்துக் கொண்டது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகி இருக்கும் நிலையில், சரத்குமார் பாஜக-வை நோக்கி என்ன காரணத்தினால் இழுத்து வரப்பட்டார் என்பது குறித்து பல்வேறு வகையான விமர்சனங்களும், காரணங்களும் முன்வைக்கப்படுகின்றன.
திமுக-வில் தொடங்கிய அரசியல் பயணம்
கடந்த 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, அப்போதைய ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக்கு எதிரான அலை வீசியது. அந்த தேர்தலின்போது திமுக – தமாகா கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய சரத்குமார், பின்னர் திமுக-வில் இணைந்தார். அந்த கட்சியில் சில இரண்டாம் மட்டத் தலைவர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பால், அங்கிருந்து விலகி அதிமுக-வில் சேர்ந்தார். அதன் பின்னர், அதிமுகவிலிருந்தும் விலகி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை, 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கினார்.
எடுபடாமல் போன சொந்த கட்சி
இக்கட்சி 2011 சட்டமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணி சார்பில் இரட்டை இலைச் சின்னத்தில் தென்காசி மற்றும் நாங்குநேரி ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், தென்காசியில் சரத்குமாரும், நாங்குநேரியில் எர்ணாவூர் ஏ. நாராயணனும் வெற்றி பெற்றனர். அதன் பின்னர், உட்கட்சிப் பூசல்களால் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. தொடர்ந்து அக்கட்சியில் பெரும்பான்மையாக இருந்த நாடார் சமூகத்தினர் மத்தியிலேயே அவரது செல்வாக்கு குறைந்து போன நிலையில், ‘லெட்டர் பேடு கட்சி’ என்ற அளவில் சுருங்கிப்போனது.
அவ்வப்போது ஏதாவது ஒரு பிரச்னைக்காக அறிக்கை வெளியிடுவதும், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலின்போது மட்டும் ‘நானும் இருக்கிறேன்’ என்பது போன்ற அவரது அரசியல் அணுகுமுறையும் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அத்துடன், கட்சியைத் தொடர்ந்து நடத்த போதிய பொருளாதார பலமும் இல்லாததால், பெயரளவுக்கே கட்சியை நடத்தி வந்தார் சரத்குமார்.
பாஜக-வில் சேர்ந்த பின்னணி
தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக அவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இதனால், அவரது கட்சி பாஜக கூட்டணியில் இணைந்து ஓரிரு இடங்களில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிரடியாக நேற்று பாஜக-வில் இணைந்தார் சரத்குமார். ஆனால், அதற்கு முன்னதாகவே ரகசியமாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும், நாடாளுமன்ற தேர்தலில் திருநெல்வேலி அல்லது திருச்செந்தூர் தொகுதியில் சரத்குமார் போட்டியிட ‘சீட்’ வழங்கப்படும் என்றும், கூடவே தேவையான பொருளாதார உதவிகளும் செய்யப்படும் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்தே சரத்குமார் பாஜக-வில் இணைந்ததாக தெரிகிறது. அதே சமயம், பாஜக-வுக்கும் தேர்தல் பிரசாரத்துக்கு நட்சத்திர பேச்சாளர்கள் பெரிய அளவில் இல்லை என்பதால், சரத்குமாரின் வருகை தங்களுக்கு உதவியாக இருக்கும் என்ற எண்ணத்திலேயே அவரை அக்கட்சி சேர்த்துக் கொண்டதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே கட்சியை பாஜக-வில் இணைத்த சரத்குமாரின் முடிவுக்கு, அவருடன் இருந்த கொஞ்ச நஞ்ச ஆதரவாளர்களிலும் கணிசமானோர் எதிர்ப்பு தெரிவித்து, கட்சியிலிருந்து விலகி அதிமுக-வில் இணைந்துள்ளனர்
இந்த நிலையில் நேற்று பாஜக-வில் இணைந்தபோது, தான் எடுத்த இந்த முடிவு திடீரென எடுக்கப்பட்டது என்ற தொனியில் பேசிய சரத்குமார், “நள்ளிரவு 2 மணி இருக்கும். அந்த நேரத்தில் என் மனைவியை எழுப்பி, எனக்கு பாஜக-வுடன் இணைய தோன்றுகிறது எனக் கூறினேன். அதற்கு அவர், ‘நீங்கள் எந்த ஒரு முடிவு எடுத்தாலும் நான் உங்களோடு உறுதுணையாக இருப்பேன்’ எனக் கூறினார். பிறகு அண்ணாமலைக்கு போனைப் போட்டு தகவல் சொன்னேன் ” என சீரியஸாக கூறியது, சமூக வலைதளங்களில் கேலியாக விமர்சிக்கப்படுவதோடு, அது தொடர்பான பல மீம்ஸ்களும் பதிவிடப்பட்டு வருகின்றன.
விமர்சனங்களுக்கு சரத்குமார் விளக்கம்
இதனைத் தொடர்ந்து, பாஜக-வுடன் சமத்துவ மக்கள் கட்சியை இணைத்தது ஏன் என்பதற்கான காரணங்களை விளக்கி சரத்குமார் இன்று நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஜனநாயகம் குறைந்து, பணநாயகம் மேலோங்கிய அரசியலில் நாம் நினைத்த இலக்கை அடைய முடியவில்லையே என்ற என் சிந்தனைக்கு, இந்த மக்களவைத் தேர்தல் ஓர் ஞானோதயமாக அமைந்தது என்றே சொல்லலாம்.
பதவி இருந்தால் தான் மக்கள் பணியாற்ற முடியும் என்பது உண்மை என்றாலும், கூட்டணி, கூட்டணி என்ற பேச்சுகளும், அதற்கு மட்டும் தான் நாம் பயணிக்கிறோமா என்ற எண்ணமும் என் அமைதியை இழக்கச் செய்தது.
என் பயணத்தில் நான் தோல்வி அடைந்துவிட்டேன் என்று பிறர் பலவிதமாக பேசினாலும், அதற்கெல்லாம் கவலைப்படாமல், நாம் மக்களுக்காக சேவை செய்ய நல்ல எண்ணத்தோடு செயல்படுகிறோம் என்பதை மனதில் தாங்கி, எனது 28 ஆண்டுகள் அரசியல் அனுபவத்தையும், என் உழைப்பையும், என் இயக்கத்தின் சகோதரர்களின் உழைப்பையும் தமிழக மக்களுக்காகவும், தேசத்தின் ஒற்றுமைக்காகவும், தேசத்தின் வளர்ச்சிக்காகவும் அர்ப்பணித்திட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை, பாஜகவுடன் இணைத்து செயல்பட அனைவரின் ஆதரவுடன் முடிவெடுத்தேன்” எனக் கூறியுள்ளார் சரத்குமார்.