கோவில்பட்டி கடலை மிட்டாய்: 150 கோடி வர்த்தகம்!
சில திண்பண்டங்களுக்கு சில ஊர்கள்தான் ஃபேமஸ். திருப்பதி லட்டு, திருநெல்வேலி அல்வா, மணப்பாறை முறுக்கு, விருதுநகர் புரோட்டா… என்று சொல்கிறோம். காரணம் அந்தந்த ஊரில் அது அது பிரபலம். அப்படி ஒரு பிரபலமான திண்பண்டம் தான் கோவில்பட்டி கடலை மிட்டாய்.
அது என்ன அப்படி ஒரு விசேஷம் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு..? ஒரு நூறு வருஷத்திற்கு முன்பே இங்கு கடலை மிட்டாய் தயாரிக்க ஆரம்பித்து விட்டார்களாம். அப்படி ஒரு பாரம்பரியம் மிக்க பகுதியாக இருக்கிறது கோவில்பட்டியும் அதைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களும்.
கோவில்பட்டியில் தயாராகும் கடலை மிட்டாய், தமிழ்நாட்டிற்குள் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் போகிறது. சிங்கப்பூர், மலேசியா, மாலத்தீவு, துபாய், கத்தார், சவூதி அரேபியா, பிரிட்டன் என்று பல நாடுகளில் தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு ஏற்றுமதியாகிறது. அதன் வர்த்தக மதிப்பு ஆண்டுக்கு 150 கோடி ரூபாய்.
சாதாரண கடலை மிட்டாயில் இவ்வளவு வர்த்தகமா என்று நினைக்கும் போதே நமக்கு மலைப்பாக இருக்கும். தரமான பொருளுக்கு விளம்பரம் தேவை இல்லை. கடந்த 2020ல் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்தது. தமிழ்நாட்டின் ஏராளமான பெருமைகளில் அதுவும் ஒன்றாக இணைந்து கொண்டது.
கோவில்பட்டியில் தயாராகும் கடலைமிட்டாய்க்கு தேவையான வேர்க்கடலையும் வெல்லமும் அருகாமையில் கிடைப்பது ஒரு சாதகமான அம்சம். அருப்புக் கோட்டையில் நிலக்கடலையும், தேனி மாவட்டத்தில் வெல்லமும் கிடைக்கிறது.
நிலக்கடலையை தோல் நீக்கி, வறுத்து, பிறகு வெல்லப்பாகுடன் கலந்து சுவையான கடலை மிட்டாயைத் தயார் செய்கிறார்கள். கோவில்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஆண்டுக்கு 10 ஆயிரம் டன் கடலை மிட்டாய் தயாராகிறது.
கிட்டத்தட்ட 150 தொழிற்சாலைகள் கடலைமிட்டாய் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. சுமார் மூன்றாயிரம் பேர் வரையில் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்பதே கோவில்பட்டி கடலை மிட்டாயின் மகத்துவத்தைப் பறைசாற்றிவிடும்!