திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் புதிய முனையத்தைத் திறந்து வைக்க வந்த பிரதமரிடம் தமிழ்நாட்டிற்குத் தேவையான கோரிக்கைகளை பட்டியலிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
விழா மேடையில் பிரதமரை வைத்துக் கொண்டு முதலமைச்சர் வாசித்த கோரிக்கை பட்டியல் இதுதான்:
தென் தமிழ்நாட்டில் இராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய இடங்களுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதியிலிருந்தும் மக்கள் ஆன்மீகப் பயணமாக வருகிறார்கள். பல நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கிறார்கள். அவர்கள் எளிதாக வந்து செல்வதற்கு ஏதுவாக, மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்க வேண்டும்.
சென்னை – பினாங்கு, சென்னை – டோக்கியோ இடையே நேரடி விமான சேவையை முன்னுரிமை அடிப்படையில் தொடங்க வேண்டும்
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட திட்டப் பணிகளுக்குப் ‘பங்குப் பகிர்வு மாதிரி‘ அடிப்படையில் ஒன்றிய அரசின் பங்களிப்பை விரைந்து வழங்க வேண்டும்.
சமீப காலமாக, இருவழிச்சாலையாக மேம்படுத்தப்படுகிற நெடுஞ்சாலைகளுக்கும் சுங்கக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
கடந்த மாதம் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில், ஏற்பட்ட பாதிப்புகளை “கடுமையான இயற்கைப் பேரிடர்கள்” என்று அறிவித்து, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நிவாரண நிதியை வழங்க வேண்டும்.
இப்படிக் கோரிக்கைகளைப் பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்தக் கோரிக்கைகள் மக்களின் கோரிக்கைகள்தானே தவிர அரசியல் முழக்கங்கள் அல்ல” என்று கூறினார்.