கொளுத்தும் கோடை வெயில்… இன்னும் எத்தனை நாட்களுக்கு வெப்ப அலை நீடிக்கும்?
தமிழ்நாட்டில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகமாக கொளுத்துவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.
மாநிலம் முழுதும் கடும் வெயில் வாட்டுவதுடன், வெப்ப அலையும் தாக்குவதால், பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி உள்ளது. ஈரோடு, கரூர், சேலம், வேலூர், திருப்பூர் உள்ளிட்ட வட உள் மாவட்டங்களில் இயல்பை விட வெப்பம் அதிகமாக காணப்படுகிறது. அதிகபட்சமாக ஈரோட்டில் 109 டிகிரி வெயில் நேற்று பதிவானது.
ஊட்டியிலும் வெப்பம்
இந்த முறை கோடை வெயிலுக்கு ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தல பகுதிகளும் தப்பவில்லை. வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் இப்பகுதிகளுக்கு படையெடுக்கும் நிலையில், ஊட்டியிலும், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. ஊட்டி வரலாற்றில் முதன்முறையாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பம் நேற்று பதிவாகியிருக்கிறது. 1951 – ஆம் ஆண்டில் இருந்து ஊட்டியில் பதிவான வெப்பநிலையில் இதுவே அதிகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எத்தனை நாட்களுக்கு வெப்ப அலை தாக்கம்?
இந்த நிலையில், தமிழ்நாட்டில் நான்கு நாட்களுக்கு, தமிழகத்தில் கடலோரம் அல்லாத வடக்கு உள்மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 14 மாவட்டங்களுக்கு நாளை மே 1 ஆம் தேதி வெப்ப அலைக்கான ‘ஆரஞ்ச் அலெர்ட்’ விடுக்கப்பட்டு உள்ள நிலையில், தமிழகத்தில் மே 3 ஆம் தேதி வரை வெப்ப அலை தாக்கம் அதிகரித்து காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“வடக்கு உள்மாவட்டங்களில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு, இயல்பான அளவை விட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் 43 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகலாம். காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும் போது, கூடுதலாக உஷ்ணம் உணரப்படும். கடலோரப் பகுதிகளில் காற்றில் 80 சதவீதம் அளவுக்கும், கடலோரம் அல்லாத உள்மாவட்ட பகுதிகளில், 50 சதவீதம் அளவுக்கும் ஈரப்பதம் இருக்கும்.
‘தேவையின்றி வெளியே வர வேண்டாம்’
இதனிடையே வெயில் உக்கிரமாக உள்ளதால், பகலில் வீட்டை விட்டு, தேவையின்றி வெளியே வர வேண்டாம் என, பொதுமக்களை அரசும் அறிவுறுத்தியுள்ளது. காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும் போது, உஷ்ணம் அதிகமாக உணரப்பட்டு, அசவுகரியமான சூழல் ஏற்படுகிறது.
எனவே, வெப்ப அலை வீசும் இடங்களில், குழந்தைகள், பெண்கள், முதியோர்கள், மாற்று திறனாளிகள் போன்றோர், சாலைகளில் சுற்ற வேண்டாம் என அரசு மேலும் அறிவுறுத்தி உள்ளது.
கோடை மழை
அதே சமயம் மே 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று அல்லது நாளை குமரி, நெல்லையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மே 2 ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மே 3, 4, 5 ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதையொட்டிய வட தமிழ்நாடு உள் மாவட்டங்களிலும் இலேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.